குழந்தைகளின் மனதுக்குள்ளே....
குழந்தையின் மூளையானது பல ரகசியங்களை உள்ளடக்கியது. அதன் விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள். கருவறையில் தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்-படுத்தப் பட்டவை. தான்தோன்றித் தனமாக அல்ல.
குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ "வெறுமையானது". அதாவது எதனையுமே கற்றுக் கொள்வதற்கு அது தயாராக இருக்கும். அவர்கள் வளர வளர கண்களால் காணும் எதுவும், காதுகளால் கேட்கின்ற எதுவும், தொடுகையினால் உணரும் எதுவும், நாக்கினாலே ருசிக்கின்ற எதுவும் அவர்களது 'புதிய' மூளையில் பதிகின்றன. எங்களுக்கு சாதாரணமாகத் தோன்றும் நடப்புகள் எல்லாம் அவர்கள் புதியதாகக் கற்றுக் கொள்வதாக இருக்கும். இவை அவர்களது மூளையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. நியூரோன்களின் கோர்-வைகளிலே தாங்கள் புரிந்து கொண்டவற்றைச் சேமிக்கிறார்கள்.
குழந்தையின் மூளை கற்றுக் கொளவதற்கு வசதியான ஓர் எந்திரம்! குறுகிய காலத்தில் அவள் என்ன எல்லாம் கற்றுக் கொள்கிறாள்? தவழுவதற்கு, நடப்பதற்கு, ஓடுவதற்கு, ஆராய்ந்து திரிவதற்கு என்று எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்குப் பின்னர் மனிதருக்கென்றே உரிய சிறப்புத் தன்மையான மொழியைக் கற்க வேண்டும். கல்வி நீண்டு கொண்டே போகும். வாழ்நாள் முழுவதும்.
ஆரம்ப கால மன வளர்ச்சி நாம் எவ்வளவுக்கு குழந்தையுடன் கொஞ்சி கட்டிப்பிடித்து விளையாடுகிறோமோ அந்த அளவுக்கு நல்ல மன வளர்ச்சி இருக்கும். இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம். அவர்கள் தரத்துக்கு நாம் இறங்கிவந்து விளையாட வேண்டும். மேற்கொண்டு குழந்தையின் மன வளர்ச்சி எப்படி நடைபெறுகிறது?
பெற்றோர்கள் தங்கள் 8-10 மாதக் குழந்தையை அவளது ஆசனத்தில் இருத்திவிட்டு, சமையலறையில் அடுத்த நேரத்திற்கான உணவைத் தயார் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். குழந்தை இவர்கள் செய்யும் ஒவ்வொன்றையும் கவனமாக அவதானிப்பாள். இருவரும் வேகமாக ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போகிறார்கள். எதை எதையோ எடுக்கிறார்கள். பிறகு அவற்றை வேறு எங்கோ வைக்கிறார்கள். இதையெல்லாம் செய்யும் போது, இருவரும் ஏதோ ஒருவருக்கு ஒருவர் கூறிக் கொள்கிறார்கள். இவ்வளவு சிக்கலான நடப்புகளையும் குழந்தைகள் மிக அவதானமாக தங்கள் மனதுக்குள்ளே வாங்கிக் கொள்கின்றன. அவர்கள் மேலும் வளர்ந்து வர, இவை எவ்வளவு சிக்கலானதாக இருந்தாலும் அவற்றின் தொடர்ச்சியையும் மொழியையும் எவ்வாறோ குழந்தைகள் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள். ஒவ்வொரு பொருளுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். அதே போல ஒவ்வொரு செயலுக்கும் அதைக் குறிப்பிடும் சொல்லுக்கும் இடையே சரியாகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர். ஆயிரமாயிரம் பொருள்களுக்கும் ஆயிரமாயிரம் செயல்-களுக்கும் அவர்கள் இவ்வாறான தொடர்புகளை மனதில் உண்டாக்குவார்கள்.
அவர்கள் 12-18 மாத வயதை எய்தும் போது, கண்ணோக்கு, திசை, புறமொழி, சைகைகள், உணர்ச்சிகள், மனநெகிழ்ச்சி போன்றவற்றையும் துல்லியமாகத் தெரிந்து கொள்ளக் கூடிய ஆற்றலைக் கொண்டி-ருப்பார்கள். அச்சமயத்தில் அவர்கள் நாம் பார்க்கின்ற திசையைப் புரிந்து கொண்டு அதை நோக்கிப் பார்ப்பார்கள். அந்தத் திசையில், அதாவது நாம் நோக்குகின்ற திசையில், காணும் பொருளை அந்நேரத்தில் நாம் சொல்லும் வார்த்தையுடன் பொருத்தி மனதில் இருத்திக் கொள்வார்கள். அதே வேளையில் நாம் வெளிப்படுத்தும் சந்தேகங்களையும் அவர்கள் புரிந்து கொள்வார்கள். எடுத்துக் காட்டாக, ஏதோ ஒரு புத்தகத்தைக் குழந்தையுடன் சேர்ந்து படிக்கும்போது, அங்கு படத்தில் இருக்கும் ஒரு மிருகத்தைக் காட்டி அதன் பெயரென்ன என்று அவள் கேட்கும்போது நாம் ஒரு பெயரைச் சொல்லி ஆனால் அது சரியானதா தெரியவில்லை என்று ஒரு சந்தேகத்தையும் சேர்த்துக் கொண்டால் அவள் அந்தச் சொல்லை அந்த மிருகத்துடன் தொடர்பு படுத்தாமல் இலகுவாக மறந்து விடுவாள்.
இவ்வயதுக் குழந்தைகள் எந்தச் சிக்கலான செயலையும் சிறு சிறு செயல்களாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுடன் விளையாடும்போது சில பொருள்களை எடுத்து ஒரு விளையாட்டு வண்டியில் வைத்து இழுத்துக் கொண்டு போய் இன்னொரு இடத்தில் அவற்றை வைக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். பொருள்களை ஒர் இடத்திலிருந்து இன்னோர் இடத்-திற்குக் கொண்டு போதல் என்ற இந்தச் செயலைக் குழந்தைகள் மிகச் சரியாக சிறிய செயல்களாக அறிந்து கொள்கிறார்கள். இதைக் கவனிக்கும் குழந்தையும் அதே போல ஒவ்வொரு பொருளாக எடுத்து வைத்து நாம் செய்ததை அப்படியே செய்து காட்டும் திறமை வந்துவிடும்.
பிள்ளைகளின் மூளை முதல் மூன்று ஆண்டுகளுக்கு வேகமாக வளர்கிறது. இந்தக் காலகட்டத்தில் பல கோடி தொடுப்புகள் மூளைக்குள் ஏற்படுத்தப் படுகின்றன. இந்தத் தொடுப்புகளே எதிர்காலத்தில் அவர்கள் கற்கும் திறனையும், உணர்ச்சிகளையும், நடத்தையையும் நிர்ணயிக்கின்றன. குழந்தைகளின் மூளை உயிரணுக்களின் வளர்ச்சி அவர்கள் வளரும் சூழலையும் அனுபவங்களையும் பொறுத்து இருக்கும். பெற்றோர்களாகிய நாம் அவர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்க வேண்டும்.
(படங்கள்: இணையத்திலிருந்து)
Quelle - வைசாவின் கருத்து