Mittwoch, August 13, 2003

தாய்ப்பால் முதல் முதலுதவி வரை

குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.

தாய்ப்பால் என்பது குழந்தைக்கு மட்டுமல்ல; அம்மாவுக்குமேகூட பலவிதங்களில் நல்லது. பின்னாளில் தாய்க்கு மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்பு இதனால் பெரிதும் குறைகிறது. சிலர் பிரசவத்துக்குப் பிறகு சரசரவென எடை போட்டுவிடுவார்கள். மீண்டும் பழைய உடல்வாகைப் பெற தாய்ப்பால் கொடுப்பது உதவும். தவிர, தாய்ப்பால் கொடுக்கும் பெண்ணுக்கு ஏற்படும் மனத்திருப்தி அவளது வாழ்க்கையின் பிற விஷயங்களிலும் பெரும் உற்சாகத்தை அளிக்கும்.

தாய்ப்பால் அளிப்பதால் அம்மாவின் உடல்வாகு சீர்கெட்டுவிடும் என்பதைப் போன்ற அபத்தம் வேறு எதுவும் கிடையாது. சொல்லப்போனால், குழந்தை தாய்ப்பாலுக்காக மார்பகங்களை அடிக்கடி உறிஞ்சுவதன் விளைவாக, அம்மாவின் யூட்ரஸ் சுருங்குகிறது. அதனால் அவளது வயிற்றுப்பாகம் கருவுறுவதற்கு முன்பு இருந்த பழைய வடிவை சீக்கிரமே பெறுகிறது.

மார்பகங்களின் அளவுக்கும், பால் சுரக்கும் அளவிற்கும் சம்பந்தமில்லை. அதிக அளவில் கொழுப்புத் திசுக்கள் இருப்பதுதான் பெரிய மார்பகத்தின் பின்னணி. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு தினமும் 750 மில்லிலிட்டர் பால் சுரக்கும். அதற்கு அடுத்த மாதங்களில் 500லிருந்து 600 மில்லிலிட்டர் பால் சுரக்கும்.

குழந்தை பிறந்தவுடனேயே பசும்பாலைக் கொடுப்பது சரியில்லை. அதில் புரதச்சத்து தேவைக்கதிகமாக இருக்கிறது. தவிர, அதிலுள்ள சோடியத்தின் அளவு அதிகம் என்பதால் குழந்தையின் சிறுநீரகங்கள் அதிக அளவில் செயல்பட வேண்டியிருக்கிறது.

தாய்ப்பாலில் உள்ள கொலஸ்ட்ரம் என்ற சத்து, குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கக்கூடியது. குழந்தை பிறந்த இரண்டு நாட்களுக்கு வெளிப்படும் சீம்பாலைத்தான் இப்படிச் சொல்கிறோம்.

தாய்ப்பால் அருந்தி வளர்ந்த குழந்தைகள் மற்ற குழந்தைகளைவிட அதிக புத்திசாலிகளாக விளங்குகிறார்கள் என்றும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து பல மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பிற்காலத்தில் தேவைக்கதிகமான பருமனோடு இருப்பதில்லை.

எவ்வளவு நேரத்திற்கொருமுறை தாய்ப்பால் கொடுப்பது? பசித்து அழும்போது கொடுக்கலாம். மற்றபடி இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கலாம். பத்திலிருந்து இருபது நிமிடங்கள் வரை பால் கொடுக்கலாம். ஆனாலும் குழந்தைகள் வேகமாகப் பாலை உறிஞ்சிக் கொள்கின்றனவா அல்லது மெதுவாகவா என்பதைப் பொறுத்ததுதானே அது அருந்தும் அளவு? எனவே ஐந்து நிமிடம் பால் கொடுத்தவுடன் குழந்தைக்குத் தூக்கம் வருகிறது என்றால் அதைத் தூங்க அனுமதித்துவிடுங்கள். எழுந்தபிறகு கொடுக்கலாம்.


--------------------------------------------------------------------------------

புட்டிப்பால்

குழந்தை பிறந்து முதல் நான்கு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே போதுமானது. அதற்குப் பிறகு பசும்பால் அல்லது எருமைப்பால் கொடுக்கலாம்.

ஒன்றை நினைவில் கொள்வது நல்லது. பாலில் கால்ஷியம் சத்து ஏராளம். பலவித வைட்டமின்களும் உண்டு. ஆனால் இரும்புச்சத்து என்பது கிடையாது. குழந்தை நன்கு வளர இரும்புச் சத்தும் தேவை. இரும்புச்சத்து அடங்கிய வைட்டமின் சொட்டுமருந்துகள் உண்டு. அவற்றை குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

தாய்ப்பால் சுரக்காவிட்டால் என்ன செய்ய? பசும்பால்தானே அடுத்த சாய்ஸ்? அல்லது ஆவின் போன்ற பால் வகைகளைக் கொடுக்கலாமா? இதில் எதையும் கொடுக்கலாம். ஆனால் பால் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பவுடர் பால் கொடுக்கும்போது ஒரு விஷயத்தை மறக்காதீர்கள். எந்த அளவு பவுடருக்கு எவ்வளவு நீர் கலக்கவேண்டும் என்பது போன்ற விவரத்தை பால் டின்னின் மேற்பகுதியிலேயே அச்சடித்திருப்பார்கள். அதன்படிச் செயல்படுங்கள். (குழந்தையின் முதல் இரண்டு மாதங்களுக்கு வேண்டுமானால் பாலைச் சற்று நீர்க்கக் கொடுக்கலாம்). பால் பவுடர் தயாரிப்பாளரின் ஆலோசனையை அப்படியே கடைப்பிடியுங்கள். காரணம், பலவித சோதனைகளுக்குப் பிறகு அனுபவபூர்வமாக வந்த தீர்மானமாக அது இருக்கும்.

முடிந்தவரை நள்ளிரவில் பால் கொடுப்பதைத் தவிர்க்கப் பாருங்கள். காரணம், நாளடைவில் குழந்தையின் பற்களில் சொத்தை விழ இது காரணமாக அமையலாம் என்பதோடு, பால் காதுக்குள் நுழைந்து அப்படியே அசையாமல் குழந்தை தூங்கிவிடலாம். காதில் சில தொற்றுநோய்கள் உண்டாகக்கூடும்.

தாய்ப்பால் சுரந்தும் சில குழந்தைகளுக்கு அது ஒத்துக்கொள்ளாமல் போய்விடுகிறது. என்ன காரணம்? பாலில் லாக்டோஸ் என்பதுதான் முக்கியப் பொருள். குழந்தைக்குத் தொடர்ந்து வயிற்றில் ஏதாவது கோளாறு என்றால் இந்த லாக்டோ சத்தை குழந்தையால் ஜீரணிக்க முடிவதில்லை. எனவே வயிற்றில் உப்புசம், இதைத் தொடர்ந்து பீய்ச்சியடிக்கும் பேதி.

ஆனால் ஒன்று, வயிற்றுப்போக்கை மட்டும் வைத்துக்கொண்டு குழந்தைக்குப் பால் அலர்ஜி என்று முடிவெடுப்பது தப்பு. குழந்தை பிறந்ததும் இரண்டிலிருந்து ஆறு வாரங்கள் வரை தாய்ப்பால் கொடுக்கும்போது இப்படி ஏற்பட்டால் மட்டுமே அப்படி ஒரு முடிவுக்கு வரலாம்.

வேறுசில சமயங்களிலும் தாய்ப்பால் அளிக்கமுடியாத துரதிர்ஷ்டமான நிலை ஏற்படக்கூடும். அம்மாவுக்குப் புற்றுநோய். அதற்கெதிராகத் தொடர்ந்து மருந்து சாப்பிடவேண்டிய நிலை. அல்லது அவளுக்கு மன இறுக்கம்போன்ற சைக்கலாஜிக்கான கோளாறுகள் காரணமாகத் தொடர்ந்து மருந்தை உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இதுபோன்ற சமயங்களில் தாய்ப்பால் கொடுக்கலாமா? டாக்டரை கலந்து நன்கு ஆலோசனை செய்யுங்கள். அதற்குப் பிறகு ஒரு முடிவெடுங்கள்.


--------------------------------------------------------------------------------

திடஉணவு

குழந்தைக்கு நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டதா? பருப்புத் தண்ணீர் அல்லது கேரட் தண்ணீரை அளிக்கலாம்.

ஐந்து மாதங்கள் ஆனவுடன் காய்கறி மற்றும் பழங்களைக் கொடுக்கத் தொடங்கலாம். ஆறாவது மாதத்தில் முட்டையில் உள்ள மஞ்சள் கருவைக் கொடுக்கலாம். இட்லியுடன் கொடுக்கத் தொடங்கலாம். அரை ஸ்பூன் நெய் அல்லது எண்ணெய் சேர்த்துக் கொடுக்கலாம். (குழந்தையின் வளர்ச்சிக்கு கொழுப்புச் சத்தும் தேவைதான்) ஆனால் குடும்பத்தில் பலரும் ‘கன’வான்கள் என்றால் இப்படி நெய், எண்ணெய் சேர்ப்பதை சற்றுத் தள்ளிப்போடலாம்.

இட்லிக்கு சர்க்கரையைத் தொட்டு கொடுப்பதைவிட, தெளிவான ரசம் போன்றவற்றைத் தொட்டுக் கொள்ளலாம். ஏனென்றால் இனிப்பு மட்டுமல்லாது மீதி சுவைகளும் குழந்தையின் நாக்குக்குப் பிடிபடுவது நல்லது. அப்போதுதான் வளர்ந்தபிறகு பலவகை உணவுகளை குழந்தை உண்ணத் தயாராகும்.

ஏழாவது மாதத்தில் சப்போட்டா போன்ற பழங்களைக் கூட கொடுக்கலாம். குழந்தைக்குப் பத்துமாதம் ஆனதும் சாதத்தையும் பருப்பையும் குழைத்துப் பிசைந்து வெண்பொங்கல் போலாக்கி காய்கறித்துண்டுகளையும் சேர்த்துக் கொடுக்கலாம். காய்கறிகளைக் குழந்தை துப்பிவிடுகிறது என்றால் அவற்றை சூப்பாக்கிக் கொடுக்கலாம். தினமும் ஒருமுறை இப்படி சாப்பிடலாம். நடுவே ஒரு வெரைட்டிக்கு ரொட்டித் துண்டில் வெண்ணெய் மற்றும் ஜாம் தடவித் தரலாமே.

எப்போதுமே ஒரே நாளில் புதிதாக இரண்டு வித உணவு வகைகளைக் குழந்தைக்குக் கொடுக்கவேண்டாம். சில நாட்கள் இடைவெளிக்குப் பிறகே அடுத்த புதிய உணவுப் பொருளை அறிமுகப்படுத்துங்கள். அப்போதுதான் குழந்தைக்கு வயிற்றுப்போக்கோ வேறு ஏதாவது சிக்கலோ ஏற்பட்டால் அது எந்த உணவினால் என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியும்.

சுமார் ஐந்து மாதம் ஆகும்போதே குழந்தைக்குப் பழங்களைக் கொடுக்கத் தொடங்கிவிடலாம். ஆப்பிள், வாழைப்பழம், பழுத்த பப்பாளி ஆகியவை முதல் சாய்ஸ். மலை வாழைப்பழம் கொடுக்கலாம். பச்சை வாழை மற்றும் ரஸ்தாளி வாழை அளிப்பதைத் தவிர்க்கலாம். வைட்டமின் ‘சி’ சத்து நிறைய அடங்கியவை _ சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு, எலுமிச்சை ஆகியவை. குழந்தைக்குத் தவறாமல் கொடுக்கலாம். பெற்றோருக்கு இந்த சிட்ரஸ் வகைப்பழங்கள் அலர்ஜி என்றால், குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயது ஆனபிறகு இதுபோன்ற பழங்களைக் கொடுத்துப் பார்க்கலாம்.

காய்ந்த திராட்சை, பேரீச்சம்பழம் ஆகியவை குழந்தையின் உடலுக்கு நல்லது. ஆனால் இவற்றை சாப்பிட்டபிறகு மறக்காமல் பற்களைச் சுத்தம் செய்துவிடுங்கள்.


--------------------------------------------------------------------------------

நாப்கின்

குழந்தைகளின் இடுப்பில் துணியைக் கட்டிவைப்பதா அல்லது இப்போது பரவலாகிவரும் பயன்படுத்தி எறிந்துவிடும் டயபர்களைப் பயன்படுத்தலாமா?

துணியில் சிலவகை சாதகங்கள் உண்டு. மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம் என்பதோடு சீப்பானதும்கூட. குழந்தைக்கும் இது அதிக வசதியாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால், நனையும் ஒவ்வொரு முறையும் துவைத்துக் காயவைக்கும் சிரமம் உண்டு.

பயன்படுத்தி தூர எறிந்துவிடும் (டிஸ்போஸபிள்) டயபர்களில் துவைப்பது, பிழிவது போன்ற பிரச்னைகளே இல்லை. சுலபத்தில் அணிவிக்கலாம், கழற்றலாம், என்ன, விலைதான் அதிகம் என்பதோடு வீட்டில் குப்பையும் அதிகம் சேரும்.

சிலர், டயபர்களைக் குழந்தை நனைத்தபிறகும் வெகுநேரம் அதை மாற்றாமல் இருக்கிறார்கள். அது தப்பு. வெளியே போகும்போது வேறுவழியில்லையென்றால் பரவாயில்லை. மற்றபடி பார்த்து உடனுக்குடன் மாற்றாவிட்டால் குழந்தைக்கு ஏதாவது நோய் தொற்றிக் கொள்ள வாய்ப்பு உண்டு. உங்கள் குழந்தையின் தோல் எவ்வளவு மென்மையானது என்பது உங்களுக்குத் தெரியாதா? உள்ளாடையை மாற்றும் ஒவ்வொரு முறையும், குழந்தையின் அடிப்பகுதியை மறக்காமல் கழுவுங்கள். இதற்கு சோப்பு கலந்த தண்ணீரில் நனைத்த துண்டைப் பயன்படுத்துங்கள். அப்புறம் ஈரமில்லாத இன்னொரு டவலால் துடைக்கவேண்டும்.

தோலை எதற்கு அலம்பவேண்டும்? சுத்தமாக இருப்பதற்காக மட்டுமல்ல. சிரங்கு உண்டாவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் பாக்டீரியாவையும் இது நீக்கிவிடுமே.

சில பேர் ப்ளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட உள்ளாடைகளை குழந்தைக்கு அணிவிக்கிறார்கள். முடிந்தவரை இதைத் தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால் இது சூட்டை உள்ளே வைத்துக் கொள்கிறது. எனவே சிரங்கு உண்டாகவும், சிரங்கு உண்டாகியிருந்தால் அதை மேலும் மோசமாக்கவும் செய்யும்.


--------------------------------------------------------------------------------

உடை

குழந்தைதானே... இதற்கென்ன பெரிதாக உடைகள் தேவைப்பட்டுவிடப் போகிறது என்று கூறிவிட முடியாது. அதன் அம்மாவைக் கேட்டுப்பாருங்கள். ‘‘ஒவ்வொரு நாளும் இதுக்கு டிரஸ் மாத்தி கட்டுப்படி ஆகலே’’ என்று ஆனந்தமாகச் சலித்துக்கொள்வாள். தினமும் நான்கு முறையாவது உடை மாற்றவேண்டியிருக்கலாம். (நனைத்துக்கெண்டு விடுகிறதே.)

குழந்தைகளுக்கு உடை வாங்கும்போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்வது நல்லது. தலைவழியாக அணிந்துகொள்ளும் உடைகளை குழந்தைகள் வெறுக்கின்றன. தலையிலிருந்து கழுத்துக்குக் கீழ்பகுதிக்கு அந்த உடை இறங்குவதற்குள் ஏதோ காரிருளில் மூச்சுமுட்ட நிற்பதுபோன்ற ஒரு பயம் அதற்கு. எனவே முன்புறம் பட்டன் போடுவது அல்லது முடி போடுவது போன்ற வகையினாலான உடைகளையே வாங்குங்கள். குளிர்காலத்தில் ஸ்வெட்டர் அணிவிக்க மறக்கவேண்டாம். அதேபோல் அதன் கால்களை குளிரிலிருந்து பாதுகாக்க, தகுந்த ஷ¨க்களையும் வாங்கிவிடுங்கள்.

வாஷிங்மெஷினில் போட்டு எடுக்கும்படியான உடைகளை வாங்குவதே வசதி. ஏகப்பட்ட அலங்காரங்களுடன் விதவிதமான வளைவுகளைக் கொண்ட உடை என்றால் இதற்கு வசதிப் படாது.

பெரியவர்களின் துணிகளில் அவை உலர்ந்த பிறகும் ஓரளவு துணி சோப்போ, டிடர்ஜெண்டோ ஒட்டிக்கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் குழந்தைகளைப் பொறுத்தவரை இவை தோலுக்குக் கெடுதல். எனவே கவனம் தேவை.

சின்னக் குழந்தைகளின் சாக்ஸ் போன்றவற்றை வாஷிங்மெஷினில் போடும்போது அப்படியே போடாமல் ஒரு தலையணை உறைக்குள் போட்டுவிட்டுச் சுற்றினால் மெஷினில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கும்.

பெண் குழந்தைகளுக்கு கையில்லாத உடைகளை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. கடும்கோடை, கடும்குளிர் ஆகிய இருவேறு வெப்பங்களிலுமே இந்த வகை உடை தொல்லைதான்.

பெரியோர்களுக்கான உடையை அணிந்துகொள்ள கொஞ்சம் வளர்ந்த குழந்தை, ஆசைப்படும். அவ்வப்போது இதை அனுமதித்து குழந்தையை சந்தோஷப்படுத்தலாமே.


--------------------------------------------------------------------------------

குளியல்

ஆவிபறக்கும் தண்ணீரில் குளிப்பாட்டினால் குழந்தையைப் பிடித்திருக்கும் சகலவியாதிகளும் பறந்துபோய்விடும் என்பதெல்லாம் தப்பு. மிகவும் சூடான தண்ணீர் வேண்டாம். கதகதப்பான நீரே போதுமானது.

உச்சிமுதல் பாதம்வரை தினசரி குழந்தையை நனைத்தெடுக்க வேண்டும் என்பதில்லை. கழுத்துக்குக் கீழே குளிப்பாட்டினால் போதும். மற்றபடி முகத்தைத் துடைத்துவிடுங்கள். தலையை நனைக்க வேண்டாமா? என்று லேசான அதிர்ச்சியோடு கேட்கும் தாய்மார்களுக்கு என் பதில் இதுதான். வாரம் ஒருமுறை தலைக்குக் குளிப்பாட்டுங்கள்.

குழந்தையின் முகத்தைப் பார்த்து மெய்மறந்து போவது இயல்பானதுதான். நடுநடுவே குழந்தையின் நாக்கையும் பாருங்கள். அதில் மாவுபோல ஒரு படலம் ஒட்டிக் கொண்டிருக்கும். குளிப்பாட்டும்போது அந்தப் படலத்தை மென்மையான முறையில் அகற்றிவிடுங்கள். ‘‘டங்க் க்ளீனர்’’ என்பதெல்லாம் பெரியவர்களுக்குத்தான். சிறுகுழந்தைகளுக்கு வேண்டாமே.

நாக்கைப் பார்க்க மறக்கும் அம்மாக்கள்கூட தவறாமல் பார்ப்பது குழந்தையின் காதுகளை. ‘‘ஐயையோ அழுக்கு’’ என்று பதறி பஞ்சையோ, தீuபீடையோ எடுத்துக்கொண்டு சுத்தம் செய்யத் தொடங்கிவிட வேண்டாம். குளிக்கும்போது, குழந்தையின் காதின் வெளிப்பகுதியை மட்டும் சுத்தம் செய்யுங்கள் போதும். சுத்தம் செய்வதாக எண்ணிக்கொண்டு காதுகளின் மென்மையான உட்புறத்துக்கு எந்தவித ஆபத்தையும் உண்டாக்கிவிடக்கூடாது.

எந்தவித சோப்பைப் பயன்படுத்துவது? தரமான எந்த சோப்பையுமே பயன்படுத்தலாம். நேரடியாக அதைக் குழந்தையின் உடலில் தேய்ப்பதைவிட, உங்கள் கையில் சோப்பைக் குழைத்துக்கொண்டு அதை உங்கள் செல்லத்தின் உடலில் தேய்ப்பது சரியான வழி.

முகத்தை சுத்தமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க கடலைமாவும், பளபளப்பான கூந்தலுக்கு சீயக்காயும் ஏற்றது என்பதை மேலை நாட்டு அழகுக்குறிப்புகள்கூட ஒத்துக்கொள்கின்றன. ஆனால் குழந்தைக்கு இவற்றைத் தவிர்த்துவிடுவது நல்லது. காரணம், இவை குழந்தைக்கு அலர்ஜியை உண்டாக்க வாய்ப்பு உண்டு.

காலம் காலமாக நடந்துவரும் பட்டிமன்றம், குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டுவது நல்லதா, இல்லையா என்பது. கெடுதல் இல்லை. அதேசமயம் குழந்தையின் உடலுக்குள் புதிதாக எந்தவித சத்தோ, மாற்றமோ இதனால் சேர்ந்துவிடுவதில்லை. ஆனால் ஒன்றை ஒப்புக்கொள்ளவேண்டும். உலர்ந்த சருமத்துக்கு எண்ணெய் நல்லதுதான்.


--------------------------------------------------------------------------------

தூக்கம்

ராத்திரியில் தூங்கிக் கொண்டிருக்கும்போது ஓவென்று அலறி ஊரைக் கூட்டும் குழந்தைகள் பல வீடுகளில் உண்டு. காரணம் பசியாக இருந்தால் பிரச்னையில்லை. பால் கொடுத்தால் அலறல் அடங்கிவிடும். வேறு ஏதாவது உடல் உபாதை என்றால் என்ன செய்வது?

‘பாதித் தூக்கத்தில் இரவுகளில் என் குழந்தை எதற்காக விழித்துக் கொள்ளவேண்டும்? அதுவும் ஒவ்வொரு நாளும்’ என்று விசனப்படும் அம்மாவா நீங்கள்? அப்படியானால் உங்களிடம் ஒரு கேள்வி. குழந்தைக்கு, இரவில் பால் கொடுக்கும்போதே அதைத் தட்டித் தூங்கச் செய்கிறீர்களா? அப்படியானால் அந்தப் பழக்கத்தை மாற்றுங்கள்.

இரவு உணவை உட்கொண்ட பிறகு தூங்க வையுங்கள். ஏனென்றால் உணவை அருந்தும்போதே தூங்கும் குழந்தை, தாயிடமிருந்தோ ஃபீடிங் பாட்டிலிலிருந்தோ தூங்கிக் கொண்டிருக்கும்போது பிரிக்கப்பட்டால், உள்மனதில் ஒருவித பாதுகாப்பில்லாத உணர்வு ஏற்பட்டு பாதித் தூக்கத்தில் விழிப்பு ஏற்படலாம்.

சில மேலை நாடுகளை விட்டுவிட்டால் குழந்தைகள் அம்மாவோடுதான் இரவில் படுத்துக்கொள்கின்றன. தாய்ப்பால் கொடுப்பதற்கும் இது சௌகர்யம்.

பொதுவாக கைக்குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் பதினாறு மணி நேரம் தூங்குகின்றன. ஆனால் ஆழ்ந்த தூக்கம் என்பது அரிதாகவே இருக்கிறது. அதனால்தான் நடுநடுவே கனவுகண்டு உலுக்கிப் போட்டதுபோல் விழித்துக் கொண்டு அழுகின்றன.

கொஞ்சம் வளர்ந்த குழந்தை என்றால் தூங்குவதற்குமுன் கதை சொல்லுங்கள். தெரிந்த ஒரே கதையையே அடுத்தடுத்த நாட்களில் சொல்வதில் இரு சௌகர்யங்கள். அம்மாவின் ஞாபக சக்திக்கு சோதனை வருவதில்லை. இரண்டாவது, ‘‘கதையின் க்ளைமாக்ஸ் என்ன?’’ என்பது குழந்தைக்குத் தெரிந்திருப்பதால் அதன் ஆவல் உணர்வு தூண்டப்படுவதில்லை. இதன் காரணமாக சீக்கிரமே தூங்கிவிடுகிறது. குளிப்பதற்குமுன் வெதுவெதுப்பான நீரில் குளியல். மெல்லிய இசை. விளக்கு வெளிச்சம் (அதிகம்) இல்லாமல் இருப்பது, தாலாட்டுப் பாடுவது போன்றவை நிம்மதியான வேகமான தூக்கத்துக்கு உத்தரவாதமென்றே கூறலாம்.


--------------------------------------------------------------------------------

அழுகை

இந்த உலகில் பிறந்த அடுத்த சில நிமிடங்களிலேயே செய்யும் முதல் காரியம் அழுவதுதான்! இந்த உலகில் தோன்றிவிட்ட சோகம் அதற்குக் காரணமல்ல. அந்தக் குழந்தைக்குள் இருக்கும் இரண்டு சிறிய நுரையீரல்களும் வேலை செய்யத் தொடங்குவதற்கான ஒரு பயிற்சிதான் அந்த அழுகை. பெரும்பாலும் பிறந்த ஆறு வாரத்துக்குள் குழந்தையின் அழுகை ஒரு எல்லைக்குள் வந்துவிடுகிறது. அதற்குப் பிறகும் குழந்தை தொடர்ந்து அழுகிறது என்றால் அம்மா கீழ்க்கண்ட விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

குழந்தை பாத்ரூம் போய்விட, அதன் உடைகளும் உடலும் நனைந்துவிட்டதா? இதற்கு அழுகை காரணமென்றால் உடையை மாற்றவேண்டும்.

பசியாக இருக்க வாய்ப்பு உண்டு என்றால் தாய்ப்பால் கொடுக்கவேண்டும்.

எதையாவது பார்த்து பயந்ததனாலும் அந்த அழுகை இருக்கலாம். குழந்தையைக் கையில் எடுத்து சமாதானப்படுத்தினாலே போதும், பிரச்னை தீர்ந்தது.

ஏதாவது பூச்சியோ, கூர்மையான பொருளோ அதன் உடலைக் குத்திக் கொண்டிருக்கிறதா என்பதை உன்னிப்பாகக் கவனியுங்கள்.

வயிற்றில் வலியோ அல்லது வாயுவோ இருந்தாலும் குழந்தை அழலாம். கிரைப்வாட்டர் இதற்கு எந்த அளவு பலனளிக்கும் என்பது குறித்து இருவேறு கருத்துகள். எனவே குழந்தையின் வயிற்றை மெதுவாகத் தடவிவிடுங்கள். பிறகு தோளில் தூக்கிக்கொண்டு முதுகைத் தடவியபடி கொஞ்சநேரம் நடந்துபாருங்கள். அம்மாவின் உடலில் உள்ள காஃபின் நஞ்சு (காபியில் உள்ளது), சாக்லெட், வெங்காயம், பூண்டு ஆகியவை அதிக அளவில் அம்மாவின் உடலில் சேர்ந்தாலும் வயிற்றில் மேற்படி சங்கடம் ஏற்பட்டு குழந்தை அழலாம்.

காய்ச்சல் காரணமாகக் குழந்தை அழுதால் என்ன செய்ய? க்ரோஸின், மெடாஸின் போன்ற பாரஸிட்டமால் மாத்திரைகளைப் பொடி பண்ணிக் கொடுக்கலாமா? வேண்டாம். ஆனால் இதே மருந்துகள் சொட்டு மருந்து வடிவத்திலும் கிடைக்கின்றன. அவற்றைக் கொடுக்கலாம். ஒருமுறை சொட்டு மருந்தை அளித்தால் அதற்கு ஆறுமணி நேரத்துக்குப் பிறகுதான் மீண்டும் அளிக்கப்பட வேண்டும். இருமுறை இப்படிக் கொடுத்தும் ஜுரம் நிற்கவில்லையென்றால் டாக்டரைத்தான் அணுக வேண்டும்.

எப்படியிருந்தாலும் தொடர்ந்து அழுதால் டாக்டரிடம்தான் செல்ல வேண்டும். சிலசமயம் குழந்தையின் அழுகையைக் கட்டுப்படுத்திய பிறகும் அம்மாவின் அழுகை தொடர்ந்து கொண்டிருக்கும்!


--------------------------------------------------------------------------------

வயிற்றுவலி

வலி என்பது ஒருவிதத்தில் நல்லதொரு எச்சரிக்கை மணியாகப் பயன்படுகிறது. வலி ஏற்பட்டால் குழந்தை அழுகிறது. நாமும் என்னவென்று கவனிப்போம். தேவைப்பட்டால் டாக்டரிடம் அழைத்துச் சென்று குழந்தையின் உடல் நோயை சரி செய்வோம்.

மூன்று சக்கர சைக்கிள் விடும்போதும் சரி, உயரக் குறைவான இரண்டு சக்கர சைக்கிள் ஓட்டும்போதும் சரி, குழந்தை, பெரும்பாலும் அடிபட்டுக் கொள்வது கணுக்காலில்தான். வலியில் கத்தும்.

சராசரியாக மாதத்துக்கு ஒரு குழந்தையையாவது குறிப்பிட்ட காரணத்துக்காகச் சிகிச்சைக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். விரைப்பகுதியில் வீக்கம் ஏற்படுவதுதான் அந்தக் காரணம்.

நாற்காலியில் குதித்து விளையாடும்போது கீழே விழ, அதற்குப் பிறகு விரைவீங்கத் தொடங்கியிருக்கலாம். சில சமயம் சாதாரண எறும்புக்கடியில்கூட இந்தப் பகுதி பெரிதாக வீங்கலாம். அப்படியானால் அது தானாகவே சரியாகிவிடும். ஆனால் கீழே விழுவதால் வீக்கம் தோன்றியிருந்தால், ரத்தம் அங்கு அதிகம் சேர்ந்து அடைத்துக் கொண்டிருக்கலாம். அப்படியானால் அறுவை சிகிச்சை அவசியமாகிவிடுகிறது.

இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. வெறும் வீக்கமென்றால் பொறுத்திருந்து பார்க்கலாம். வலியோடு கூடிய வீக்கமென்றால் உடனே மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.

குழந்தை தொடர்ந்து வீறிட்டு அழுகிறது. அதே சமயம் ஏதோ வலியில் அவஸ்தைப் படுவதுபோல் தன் முழங்கால்களை அடிக்கடி மேற்புறமாகத் தூக்கிக் கொள்கிறது என்றால் குழந்தைக்கு வயிற்றுவலி இருக்க வாய்ப்பு உண்டு. பசும்பால் அலர்ஜியாலும் இந்த வலி ஏற்படக்கூடும். அல்லது உணவு கொடுக்கும்போது இடையே காற்று போவதாலும் அந்த வலி உண்டாகியிருக்கலாம்.


--------------------------------------------------------------------------------

பல்

குழந்தைக்கு ஆறு வயதாகும்போது அதன் தாற்காலிகப் பற்கள் விழத்தொடங்குகின்றன. நிரந்தரப் பற்கள் உருவாகின்றன. அதற்குப் பிறகு பற்கள் முளைப்பதற்கு இயற்கை ஒரு கணக்கு வைத்திருக்கிறது.

ஆறு அல்லது ஏழு வயதிலிருந்து வருடத்திற்கு நான்கு பற்கள் முளைக்கின்றன. இப்படித் தொடர்ந்து ஐந்து வருடங்களுக்குப் புதுப்பற்கள் முளைத்துக் கொண்டிருக்கும்.

குழந்தைக்கு இந்தக் காலகட்டத்தில் மறக்காமல் நாம் உணர்த்தவேண்டிய விஷயம் ஒன்று உண்டு. தன் பற்களையும் வாயின் பிறபகுதிகளையும் மிகவும் சுத்தமாக குழந்தை வைத்திருக்கவேண்டியது அவசியம்.

நிரந்தரப் பற்கள் முளைக்கும் காலகட்டத்தில்தான் குழந்தைக்கு டான்சில்ஸ், சைனஸ், காதுவலி போன்ற அவஸ்தைகள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.

உப்பு நீரால் வாய் கொப்பளித்து வெளியேற்றுவது (நிஷீரீரீறீவீஸீரீ) வாய்ப்பகுதிக்கும், தொண்டைக்கும் மிக நல்லது. இந்தப் பழக்கத்தை குழந்தைக்கு ஆறேழு வயதாகும்போதே அறிமுகப்படுத்திவிடுவது நல்லது.

சில குழந்தைகளுக்கு பிறக்கும்போதே பல் இருக்கும். ஆனால் பொதுவாக ஆறு மாதமாகும்போது கீழ் வரிசையின் முன் பக்கத்தில் இரண்டு அரிசிப் பற்கள் முளைக்கும். அதற்குப் பிறகு மேல் வரிசையின் முன்பக்கத்தில் இரண்டு பற்கள்.

ஆறேழு மாதங்களாகியும் குழந்தைக்குப் பல் முளைக்கவில்லையென்றால் பதற்றப்பட வேண்டாம். பல் முளைப்பதற்காக ஒரு வருடம் வரை காத்திருந்துவிட்டு அதன்பிறகு மருத்துவ ஆலோசனை பெறலாம். நெல்லால் ஈறுப் பகுதியைக் கீறினால் பல் முளைக்கும் என்பதற்கெல்லாம் எந்த விஞ்ஞான ஆதாரமுமில்லை.

பொதுவாகக் குழந்தைக்கு ஐந்து வயதாகும்போது அதற்கு இருபது பற்கள் இருக்கவேண்டும். பல் முளைப்பதனாலேயே வயிற்றுப்போக்கு உண்டாவதில்லை. பல் அப்போது ஊறுவதனால் கையில் கிடைத்ததையெல்லாம் குழந்தை வாயில் போட்டுக் கொள்கிறது. அது வேண்டுமானால் வயிற்றுப் போக்குக்கு வழிவகுக்கலாம்.

கிட்டத்தட்ட பல் முளைக்கும் காலகட்டத்தில்தான் குழந்தையின் பல்வேறு நடவடிக்கைகளும் கூடவே நடைபெறத் தொடங்குகின்றன. குப்புறப்படுத்துக்கொள்வது, தாய்ப்பாலோடு வேறு திரவ உணவும் அளிக்கப்படுவது _ இப்படிப்பட்ட காரணங்களாலும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம் என்றாலும் எல்லாப் பழிகளுமே பெரிதாக முளைக்கும் பற்களின் மீதே விழுகின்றன.

பல் முளைக்கும் காலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் அரிசிக்கஞ்சியும் நெஸ்டமும் கலந்து கொடுக்கலாம்.


--------------------------------------------------------------------------------

நோய்த்தடுப்பு

பலவித நோய்களுக்கு தடுப்பூசிகள் இப்போது உள்ளன. அவற்றை உரிய கால கட்டங்களில் குழந்தைக்கு அளிக்கவேண்டியது பெற்றோரின் கடமை என்றே கூறலாம்.

காசநோய்க்கான தடுப்பு மருந்தை (ஙிசிநி) குழந்தை பிறந்த இருவாரங்களுக்குள் கொடுக்கவேண்டும். போலியோ சொட்டு மருந்தை பிறந்ததும் ஒருமுறை, ஆறு, பத்து மற்றும் பதினான்காவது வார இறுதியில் ஒவ்வொரு முறை, ஒன்றரை வயதில் ஒருமுறை, நான்கரை வயதில் ஒருமுறை என்று ஐந்து தடவைகள் அளிக்க வேண்டும். பெரியம்மை நோய்க்கு அடுத்ததாக உலகிலிருந்தே ஒழிக்கப்படவேண்டிய நோய் என்று உலக சுகாதார நிறுவனம் தேர்ந்தெடுத்திருப்பது போலியோவைத்தான்.

முத்தடுப்பு ஊசி என்பது டிப்தீரியா, கக்குவான் இருமல், டெடனஸ் ஆகிய மூன்று கடுமையான நோய்களைத் தடுக்கிறது. இதையும் ஐந்து முறை அளிக்கவேண்டும். 6,10,14 வாரங்களின் இறுதியில் ஒவ்வொரு முறையும், 18 மாதம் முடியும்போது ஒரு முறையும் ஐந்து வயதை நிறைவு செய்யும்போது ஒருமுறையுமாக அளிக்கவேண்டும்.

எய்ட்ஸைவிட அதிகம் பேர் இறப்பது ஹெபடிடிஸ் ‘பி’ எனப்படும் மஞ்சள் காமாலை நோய்ப் பிரிவில்தானாம். நல்லவேளையாக இதற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டார்கள். குழந்தைக்கு எவ்வளவு வயதாக இருந்தாலும் இந்தத் தடுப்பு மருந்தை அளிக்கலாம். முதல் டோஸ் அளிக்கப்பட்ட அடுத்த மாதத்தில் இரண்டாவது டோஸ§ம், முதல் டோஸ் அளித்த ஆறாவது மாதம் மூன்றாம் டோஸையும் கொடுக்க வேண்டும். ஹெபடிடிஸ் ஏ_க்கும் இப்போது தடுப்பு மருந்து வந்துவிட்டது. ஒரு வயதில் ஒருமுறையும், பிறகு ஒன்றரை வயதில் அடுத்த முறையும் இதற்கான தடுப்பு மருந்து அளிக்கலாம்.

குழந்தைக்கு ஒன்பது மாதங்கள் ஆனபிறகு தட்டம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்தையும், ஒன்றேகால் வயதானபிறகு எம்.எம்.ஆர். எனும் தடுப்பு மருந்தையும் அளிக்கவேண்டும். இரு வருடங்களுக்குப் பிறகு டைபாய்டுக்கான தடுப்பு மருந்தையும் பத்து மற்றும் பதினாறு வருடங்களின் முடிவில் டி.டி. (டெடனஸ்) நோய்க்கெதிரான தடுப்பு மருந்தையும் அளிக்கலாம்.

தடுப்பு மருந்தை அளிப்பதற்கு முன் உங்கள் பரம்பரையில் யாருக்காவது வலிப்புநோய் வந்திருந்தால் அதை டாக்டரிடம் மறக்காமல் கூறுங்கள். அதேபோல் வயிற்றுப்போக்கு, அதிக ஜுரம் போன்றவை குழந்தைக்கு அப்போது இருந்தால் அதையும் மறக்காமல் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அப்போது ஒருவேளை டாக்டர் இந்தத் தடுப்பு மருந்தை அளிப்பதை தள்ளிப்போடலாம். காரணம், சிலவகை தடுப்பு மருந்துகளுக்கு பக்கவிளைவுகள் உண்டு.


--------------------------------------------------------------------------------

உடல் நலக் குறைவு


பசியில்லாமல் போகிறது. வழக்கமான சுறுசுறுப்பு குறைந்து குழந்தை முடங்கிப் போய் கிடக்கிறது. பார்வை கொஞ்சம் வெளிறிப்போய்விட்டது. அடிக்கடி (கொஞ்சம் தண்ணீராகவே) மலம் கழிக்கிறது. போதாக்குறைக்கு வாந்தி அல்லது ஜுரம். இவற்றில் சில அறிகுறிகள் இருந்தாலே குழந்தைக்கு உடல் நலமில்லை என்றுதான் பொருள்.

பொதுவாகவே காலை வேளையைவிட மாலை வேளையில் குழந்தையின் உடல் வெப்பம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். பகல்வேளையைவிட சுமார் இரண்டு டிகிரி ஃபாரன்ஹீட்வரை அதிகமாக இருந்தால் அதற்காகக் கவலைப்படவேண்டாம். ஆனால் நூறு டிகிரியைத் தாண்டினால் அது உடனடியாகச் செயல்பட வேண்டிய கட்டம்.

காய்ச்சல் மட்டுமல்லாது கூடவே குழந்தைக்கு உடலும் நடுங்கினால் டாக்டரிடம் அழைத்துச் செல்வதுதான் நல்லது. ஏனென்றால் இது ஒரு வேளை வலிப்பு நோயில் கொண்டுவிடலாம். அதற்காக குழந்தையின் உடலில் காய்ச்சலும் நடுக்கமும் ஏற்பட்டால் பயந்து நடுங்கவேண்டாம்.

போதாதவேளை. வலிப்பு வந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். என்ன செய்வது? குழந்தையைப் பக்கவாட்டில் படுக்கவையுங்கள். நாக்கைக் கடிக்காமல் தடுக்க ஒரு ஸ்பூனை சுத்தமான துணியில் சுற்றி பற்களுக்கு நடுவே வையுங்கள். பிறகு டாக்டரிடம் எடுத்துச் செல்லுங்கள்.

தும்மல் ஏற்பட்டால் ‘‘கிருஷ்ண கிருஷ்ணா’’ என்று உடனே கூறும் வழக்கம் சிலருக்கு உண்டு. பிறந்து சில மாதங்களே ஆன பாப்பா அடுக்குத் தும்மலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தால் அதற்குச் சமமாக கிருஷ்ணரின் திருநாமத்தைச் சொல்வதோடு அம்மா நிறுத்திக் கொள்ளவேண்டாம். ‘‘ஜலதோஷம். இது ஜலதோஷத்தைத் தவிர வேறில்லை’’ என்றும் முடிவெடுத்துவிட வேண்டாம். தும்மல் என்பது என்ன? மூக்குப் பகுதியில் ஏதோ வேண்டாத எதிராளி வந்துசேர்ந்திருக்கிறான். அதை வெளியேற்றும் முயற்சிதான் தும்மல். எனவே மூக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள உலர்ந்த அடைப்பை லேசான உப்புக் கரைசலைவிட்டுக்கூட கரைத்துவிடலாம்.

குழந்தைக்குக் காதிலிருந்து சீழ் வடிந்தாலோ மூச்சு விடும்போது விசித்திரமான ஒலி உண்டானாலோ மருத்துவரை அணுகுவது நல்லது. குழந்தை கீழே விழுந்தவுடனே மயக்கமடைந்தால் அதுவும் உடனடியாக கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்தான்.


--------------------------------------------------------------------------------

நோய்கள்

சின்னச் சின்ன உடல் அசௌகரியங்களுக்கு வீட்டிலேயே சில நிவாரணிகள்.

குழந்தைக்கு தலைக்குள் நீர் கோத்துக் கொண்டிருந்தால் _ நீலகிரி தைலம் எனப்படும் யூகலிப்டஸ் எண்ணெயின் ஆவி பயனளிக்கும். மிகவும் சிறிய குழந்தை என்றால் தலையணையைச் சுற்றி யூகலிப்டஸ் எண்ணெய் நனைக்கப்பட்ட துணி உருண்டைகளை வைக்கலாம்.

காய்ச்சல்: க்ரோசின், ப்ரூஃபென் போன்ற மாத்திரைகளை நாடுவதற்கு முன் நீரினால் ஸ்பான்ஞ் பாத் கொடுங்கள். நேரடியாக ஐஸ் தண்ணீரில் உடலை ஒத்தியெடுக்கக்கூடாது. குளிரால் நடுக்கம் வந்துவிடலாம். சாதாரணமான தண்ணீரில் ஈரத்துணியை நனைத்து உடலைத் துடைக்க வேண்டும். டர்க்கி டவலாக இருந்தால் மேலும் நல்லது. முக்கியமாகப் பெரிய ரத்தக்குழாய்கள் உள்ள அக்குள் மற்றும் தொடை இடுக்குப் பகுதிகளில் நன்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். பதினைந்து முறையாவது இப்படிச் செய்ய வேண்டும்.

தொண்டை தொடர்பான சிக்கல்கள் _ உப்புத் தண்ணீரில் தொண்டையை கார்கிள் செய்து கொள்வதுதான். குழந்தைக்கு சுமார் மூன்று வயதாகும்போதே இந்தப் பயிற்சியைத் தொடங்கிவிடலாம்.

தசைப்பிடிப்புகளும் சுளுக்கும்: விரல்களால் அந்தப் பகுதியை அழுத்தி நீவுவது, எண்ணெயைக் கொதிக்க வைத்து அந்தப் பகுதியில் ஒத்தடம் கொடுப்பது என்பதெல்லாம் விஷயத்தைச் சிக்கலாக்கிவிடும். ஐஸ் கட்டியை ஒரு துணியில் சுற்றி அந்தப் பகுதியில் ஒத்தி ஒத்தியெடுங்கள். பெரும்பாலும் சரியாகிவிடும். (ஐஸ் கட்டியை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் வைக்கவேண்டாம்).

விஷப்பூச்சிக்கடி: டாக்டரிடம் குழந்தையை எடுத்துச் செல்லுங்கள். ஆனால் அதற்குமுன் கடிவாய்ப் பகுதியை பலமுறை சோப்புத் தண்ணீரால் நன்கு கழுவிவிடுங்கள். இது அவசியமான முதலுதவி.

கீழே விழுந்து அடி: பஞ்சு மற்றும் பாண்டேஜ் துணி ஆகியவற்றால் மட்டும் அந்தப் பகுதியை அழுத்திக் கட்டினால்போதும். பெரிய காயம் என்றால் மருத்துவ உதவி தேவை. (மஞ்சள் பொடி, சர்க்கரை, காபிப்பொடி என்று அப்புவது வேண்டாம்.)


--------------------------------------------------------------------------------

பொம்மைகளுடன்

கைக்குழந்தைக்கு ஏதாவது பொம்மை வாங்கவேண்டுமென்றால் தொட்டிலுக்கு மேலே தொங்கும் குடை ராட்டினத்தை வாங்குவார்கள். சாவி கொடுத்தால் இது சுற்றும். கூடவே ஒலியும் எழுப்பலாம். குழந்தை கண் விரித்து இதைப் பார்த்து ரசிக்கும் அழகே அழகு. அல்லது இருக்கவே இருக்கிறது கிலுகிலுப்பைகள். குழந்தையின் உறவினர் இதைக் கையில் பிடித்துக்கொண்டு ஆட்டி ஒலியெழுப்ப, குழந்தை சத்தம் வரும் திசையில் எல்லாம் தலையைத் திருப்புவது தனி அழகுதான்.

சுமார் நான்கு மாதமாகும்போது குழந்தையால் தன் கையில் சிறு பொருள்களைப் பிடித்துக்கொள்ள முடிகிறது. அதற்காகப் பாசம்பொங்க பலவித பொம்மைகளை வீட்டில் வாங்கிக் குவிக்க வேண்டாம். ஏனென்றால் அவற்றுக்கிடையே உள்ள வேறுபாடுகளைக் கண்டு உணரும் சக்தி குழந்தைக்கு முழுவதுமாக ஏற்படுவதில்லை. எனவே மிருதுவான பந்து போன்றவற்றை வாங்கிக் கொடுக்கலாம்.

ஆறு மாதத்தைத் தாண்டிவிட்டால் கையில் கிடைக்கும் பொம்மையை வாயில் வைத்துக்கொள்ளும் வேண்டாத பழக்கம் வந்து தொலைக்கிறது. எனவே கூர்மையான பொம்மையோ, சாயம் போகும் பொம்மையோ கொடுக்க வேண்டாம். அதன் கைகளுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் பொம்மைகள் வாங்கிக் கொடுக்கலாம். ஒரு கூடையில் நிறையப் பொருள்களை (அவை பாதுகாப்பானவையாகவும், எடை குறைந்தவையாகவும் இருக்கட்டும்) நிரப்பிக் குழந்தையிடம் கொடுத்துவிடுங்கள். அதுபாட்டுக்கு அவற்றைக் கீழே கொட்டும். பின் அவற்றைக் கூடையில் எடுத்துப் போடும். அப்போது குழந்தையின் முகத்தில் தோன்றும் உற்சாகம் சுற்றியிருப்பவர்களிடம் வேகமாகப் பரவும்.

பந்தைக் கீழே தட்டி விளையாடுவது என்பதில் எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன தெரியுமா? கைகளையும் கண்களையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான பயிற்சி இது.

ஒரு வயதாகும்போது பொம்மைக்கார்கள் அளிப்பதில் தவறில்லை. டெடி பியர் போன்ற பொம்மைகளை இன்னும் வளர்ந்தபிறகு கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் இதுபோன்ற புசுபுசு பொம்மைகளில் அழுக்கு சேர சான்ஸ் அதிகம். அந்த அழுக்கு குழந்தையின் உடலுக்குள் சென்று ‘‘வீசிங்’’ எனப்படும் இழுப்பில் கொண்டு சென்றுவிட்டால்? ஐயோ வேண்டாமே.

பொம்மைத் துப்பாக்கியால் சுடுவது, பேட்டரியில் இயங்கும் பொம்மைகள் ஆகியவை இயந்திரத்தனமானவை. அதாவது அவற்றினால் குழந்தைகளின் அறிவுத்திறன் அதிகமாவதில்லை. அதேசமயம் நினைவாற்றலை வளர்க்கும் விளையாட்டுகளும், கற்பனை சக்தியைத் தூண்டும் பொம்மைகளும் மிகவும் தேவை.

வாங்கிக்கொடுக்கும் பொம்மைகள் ஒருபக்கம் இருக்கட்டும். குழந்தையோடு உட்கார்ந்துகொண்டு விளையாடுங்கள். இரு கைகளையும் விரித்து அதற்குள் குழந்தையைக் குத்தவையுங்கள். பிடித்துவிட்டால் அது அவுட். பிடிக்காவிட்டால் நீங்கள் அவுட். அடிக்கடி நீங்களே அவுட்டாகி குழந்தைக்கு சந்தோஷத்தைக் கொடுங்கள். குழந்தையின் உள்ளங்கையில் தோசை வார்ப்பது போன்ற விளையாட்டெல்லாம்கூட உணர்வுபூர்வமான பாலத்தை ஏற்படுத்தும்.


--------------------------------------------------------------------------------

மசாஜ்

குழந்தையை மசாஜ் செய்வதில் பலவித நன்மைகள் உண்டு. இதனால் தாய்க்கும் குழந்தைக்குமிடையே உள்ள பந்தம் மேலும் உறுதியாகிறது. குழந்தையின் உடலில் உள்ள தசைகள் புத்துணர்ச்சி பெறுகின்றன.

தவிர, சமீபத்திய ஆராய்ச்சிகள் இன்னொரு நன்மையையும் குறிப்பிடுகின்றன. மசாஜ் செய்யப்பட்ட குழந்தை, அதிக நேரம் தடையில்லாது தூங்குகிறது. இந்த ஆராய்ச்சியில் இருபது தாய்மார்கள் கலந்து கொண்டார்கள். அத்தனைபேரும் இரு வாரங்களே நிரம்பிய குழந்தைகளுக்குத் தாய்மார்கள். இவர்கள் தினமும் தூங்குவதற்கு முன் குழந்தையை அரை மணி நேர மசாஜிற்கு உட்படுத்தினார்கள். இதில்தான் மேற்படி கண்டுபிடிப்பு.

‘‘சரியா ராத்திரியானா அழ ஆரம்பிச்சுடும். எனக்குத் தினமும் சிவராத்திரிதான்’’ என்று அம்மாக்கள் இனி அலுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதற்குமுன் சரியான விதத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும் தெரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளை மசாஜ் செய்வதற்கென்றே உறுப்பினர்களைக் கொண்ட ஒரு சர்வதேச அமைப்பு இருக்கிறது (மிஸீtமீrஸீணீtவீஷீஸீணீறீ கிssஷீநீவீணீtவீஷீஸீ ஷீயீ மிஸீயீணீஸீt விணீssணீரீமீ). இதில் 1996_ல் மட்டும் பத்தாயிரம் பெற்றோர்கள் குழந்தைக்கு மசாஜ் செய்யும் கலையைக் கற்றுக் கொண்டார்களாம்.

மசாஜ் செய்வது குழந்தைக்கு மட்டுமல்ல; அந்த நேரத்தில் அம்மாவுக்கும்கூட பெரும் மனநிம்மதியையும் புத்துணர்வையும் அளிக்கிறது என்கிறது அந்த அமைப்பு.

மசாஜ் செய்ய இயலாதவர்களோ தெரியாதவர்களோகூட குழந்தையை அணைத்துக் கொள்வது, அதன் முதுகைத் தடவிக்கொடுப்பது என்பதைச் செய்யலாமே.

மசாஜ் செய்வதன் மூலம் குழந்தை தேவைப்படும் அளவுக்கு எடைபோடும் என்கிறார்கள் மியாமி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள். அதுமட்டுமல்ல, வயிற்று வலியிலிருந்து அளவுக்கதிகமான செயல்பாடுகள் வரை பல சங்கடங்களுக்கு மசாஜ் ஒரு சிறந்த நிவாரணி என்றும் கண்டறிந்திருக்கிறார்கள்.


--------------------------------------------------------------------------------

பயணம்

குழந்தைக்கு சுமார் ஒன்றரை வயதானால் போதும். வெளியில் செல்லத் துடிக்கும். மற்றவர்களின் செருப்புகளைப் போட்டுக் கொள்ளத் தொடங்கும். அதாவது, டாட்டா சொல்ல வேண்டுமாம்! எனவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளியில் அழைத்துச் செல்லுங்கள்.

‘எங்க இவளை அழைச்சிக்கிட்டு ஷாப்பிங் போவது? இவளைப் பாத்துக்கத்தான் நேரம் சரியா இருக்கும்’ என்ற அம்மாவின் புகார் நியாயமானதுதான். ஷாப்பிங்கின்போது குழந்தையை அழைத்துச் சென்றால், பார்த்துப் பொருள்களை வாங்கவும் முடியாது, குழந்தையை சரியாகக் கண்காணித்துக் கொள்வதும் கஷ்டம்.

ஆனால், பூங்கா போன்ற இடங்களுக்கு குழந்தையை அழைத்துச் செல்வதில் என்ன தடை? குழந்தை நடக்கவும், ஓடவும் பயிற்சி பெற பூங்காக்கள்தான் ஏற்றவை. காற்றும் கொஞ்சம் தூய்மையாக இருக்கும்.

குழந்தையைப் பூங்காவில் சுதந்திரமாக நடக்கவோ, ஓடவோ விடுங்கள். வழியில் காலிலோ, கையிலோ தட்டுப்படும் ஒவ்வொரு பொருளும் அதற்குப் புதிய அனுபவம். ஏதாவது ஓரிடத்தில் உட்கார்ந்துகொண்டு இருக்கும் காக்கையுடனோ அணிலுடனோ குழந்தை பேசலாம். இதெல்லாம் குழந்தைக்கு அற்புதமான அனுபவங்கள்.

பூங்காவில் பிறகு குழந்தைகளும் வந்திருக்கலாமே. அறிமுகமாகாத குழந்தைகளோடு உங்கள் குழந்தை விளையாடத் தொடங்கினால் கவனம் தேவை. மென்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது தெரியாத காலகட்டம். சண்டை சச்சரவு ஏற்பட்டால் தவிர்த்து விடுங்கள்.

பஸ்ஸிலோ காரிலோ பயணமா? குழந்தைக்கான நாப்கினை எடுத்துச் செல்லுங்கள். பயணத்தின்போது குழந்தைக்கு காய்ச்சல் ஏற்படலாம். பயணத்தில் வாந்தி எடுத்தால் குழந்தையை உட்கார வைத்துக்கொள்வது நல்லது. முடிந்தால் ஜன்னலோரமாகக் குழந்தையை உட்கார வைத்துக் கொள்ளுங்கள். புதிய காற்று வீசுவது நல்லதுதான்.

பொதுவாக வீட்டில் சாப்பிடுவதைவிட குறைந்த அளவு உணவைத்தான் குழந்தை பயணத்தின்போது சாப்பிடும். என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகத் தடவைகளில் இப்படிச் சாப்பிடும். எனவே பயணத்தின்போது, எதையும் சாப்பிடும்படி குழந்தையைக் கட்டாயப்படுத்த வேண்டாம். காய்ச்சிய நீரை எடுத்துச் செல்ல மறந்துவிடப் போகிறீர்கள். பெரும்பாலான நோய்கள் தண்ணீரின் மூலமாகத்தான் பரவுகின்றன.


--------------------------------------------------------------------------------

பாதுகாப்பு

தரையில் சின்னச் சின்ன பொருள்கள் இருந்தால் பாய்ந்து சென்று எடுத்துவிடுங்கள். குழந்தை வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொண்டால் யாருக்கு அவஸ்தை.

ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். இல்லையென்றால் மறக்காமல் உள்ளாடை அணிவித்தபிறகு மட்டுமே அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)

சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.

சுமார் ஒரு வயதுவரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டியிருக்கும்.

சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப்பார்க்க ஆசைப்படுகிறது.

சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றையெல்லாம் குழந்தைக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.

சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்துவிடவேண்டாம்.

சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.

ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள். கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.

குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.


--------------------------------------------------------------------------------

முதலுதவி

குழந்தைக்கான முதலுதவிப் பெட்டியில் கட்டாயம் இருக்கவேண்டியவை என்று ஒரு பட்டியல் உண்டு. ஸ்டெரிலைஸ் செய்யப்பட்ட பஞ்சு, பாண்டேஜ், ஆன்ட்டிசெப்டிக் க்ரீம் ஆகியவை முக்கியமானவை.

இரண்டு மூன்று அளவுள்ள பாண்ட்_எய்டுகள் வைத்திருப்பது நல்லது. ஏனென்றால் காயங்கள் எந்த அளவில் எங்கு ஏற்படும் என்பதை முன்னதாகவே யூகிக்கமுடியாதே!

காயங்களைக் கழுவ டெட்டால் போன்ற திரவங்கள் இருக்கட்டும். தெர்மாமீட்டரும் அவசியம் தேவை.

குழந்தையின் கண்களில் தூசு விழுந்தால் நீரினால் அந்தப் பகுதியைத் துடைத்துவிடலாம். கண்ணில் ஏதாவது சிறுபொருள் காணப்பட்டால் சுத்தமான கைக்குட்டையின் முனையின் மூலம் அதை வெளியே எடுக்கலாம். ஆனால் ஒன்று, ஒருபோதும் குழந்தை தன் கண்களைக் கசக்கிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளவும். காதுகளில் ஏதாவது சிறு பொருள் சென்றுவிட்டால் அதை எடுக்க எந்த முயற்சியும் செய்யவேண்டாம். நேரே டாக்டரிடம்தான் போகவேண்டும். ஆனால் காதுக்குள் வெதுவெதுப்பான தண்ணீரை ஊற்றலாம். பூச்சி மேலே வந்து மிதக்கும். எடுத்துவிடலாம்.

குழந்தையின் மூக்கிலிருந்து சம்பந்தமில்லாமல் ஏதோ ஒரு திரவம் வடிந்து கொண்டிருக்க, அது விடாமல் அழவும் செய்தால் எதையோ மூக்கிற்குள் அது செலுத்திக்கொண்டுவிட்டது என்று யூகிக்கலாம். பாதிக்கப்படாத மூக்கின் பாதியை நீங்கள் விரலால் அழுத்திக்கொண்டு மற்றொரு பாதியின் மூலம் வேகமாக வெளியே மூச்சை விடச் சொல்லலாம். இதன்மூலம் அந்தப் பொருள் வெளியே வரவில்லையென்றால் டாக்டரிடம்தான் போயாகவேண்டும்.

குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்லவேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.

எதையாவது வாய்க்குள் போட்டுக்கொள்வது குழந்தைகளின் வழக்கம். பெரும்பாலும் இவை ஜீரணப்பாதை வழியாக வெளிவந்துவிடும். ஆனால் உணவுக்குழாயிலோ, காற்றுக்குழாயிலோ சிக்கிக் கொண்டு பெரும் அவஸ்தை கொடுத்தாலோ, உள்ளே விழுங்கிய பொருள் கூர்முனைகளைக் கொண்டது என்றாலோ உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்.


ஆலோசனை:குழந்தை நல மருத்துவர்
டாக்டர் நிகிலா ஷர்மா
ஆக்கம்: ஜி.எஸ்.எஸ்.


நன்றி - குமுதம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.