Mittwoch, April 07, 2004

தொட்டில் மரணம் என்பது என்ன?

சென்னையின் பிரபல மகப்பேறு மருத்துவமனை அது. நன்றாக இருந்த அந்தக் கைக்குழந்தை தூங்கும்போதே திடீரென்று இறந்து போனது. எந்தக் காரணமும் இல்லாமல் இப்படி பொசுக்கென்று கைக்குழந்தைகள் இறந்து போவதை தொட்டில் மரணம் (கிரடில் டெத்) என்கிறார்கள் மருத்துவர்கள். என்னதான் நடந்தது?

அதிகாலை நேரம்... குழந்தையின் சிணுங்கல் சத்தம் கேட்டவுடனே மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்த அந்தத் தாய்க்கு ஸ்விட்சை ஆன் செய்ததுபோல் சட்டென்று விழிப்பு தட்டியது. குழந்தை பிறந்து இரண்டு நாட்களே ஆன நிலையில்... அதுவும் சிஸேரியன் பிரசவம் என்பதால் அவரால் எழ முடியவில்லை. துணைக்கு வந்திருந்த சகோதரியை எழுப்பினார். வாரி சுருட்டிக்கொண்டு எழுந்த சகோதரி, மடமடவென்று குழந்தைக்குப் பால் புகட்டினார். பாலைக் குடித்த குழந்தை உறக்கத்தில் ஆழ்ந்தது. அந்த உறக்கம், குழந்தையை மீளாத துயிலுக்கு அழைத்துச் செல்வதற்கான ஒத்திகை என்பதை உணராமல் வெளியே இருள் பிரிந்து கொண்டிருந்தது.

விடிந்தது... அன்றாட செக்_அப் செய்ய வந்த நர்ஸ், குழந்தையின் உயிர்மூச்சு நின்று போயிருந்ததை உணர்ந்து கொண்டார். தயக்கத்துடன் அவர் விஷயத்தைச் சொல்ல, அதிர்ச்சியில் உறைந்து போனது அந்தத் தாயின் உள்ளம். ‘குழந்தை நல்லாத்தானே இருந்துச்சு. நைட்டு பாலுக்கு அழுதுச்சே! நல்லா பால்கூட குடிச்சுச்சே... அதுக்குள்ள என்ன ஆச்சு?’ என்று கேவலுடன் வெடித்து அழுதார் அந்தப் பெண்.

சடன் இன்ஃபேன்ட் டெத் சிண்ட்ரோம், (சுருக்கமாக ‘சிட்ஸ்’), கிரெடில் டெத் என்று விதவிதமான பெயர்களில் இதைப்பற்றி டாக்டர்கள் விளக்கிச் சொன்னாலும் அந்தத் தாய்க்கு தன் குழந்தை கிடைக்கப் போவதில்லை!

சத்தமே இல்லாமல் வந்து கைக்குழந்தைகளின் உயிர்மூச்சை, அமைதியாக நிறுத்தி இப்படி கொடூரம் செய்யும் இந்த தொட்டில் மரணம் என்பது என்ன? எப்படி இது நிகழ்கிறது? என்ற பல தாய்மார்களின் பதற்றமான இந்தக் கேள்விக்கு விளக்கம் தருகிறார் குழந்தைகள் நிபுணரான டாக்டர் பாலச்சந்திரன்.

‘‘நல்லபடியாக, ஆரோக்கியமாக இருக்கும் குழந்தைக்குக்கூட இதுபோன்ற அபாயம் நேரலாம். ஒரு விஷயம்... குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்தான் இப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது.

அதிலேயும் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களில்தான் இந்த ஆபத்து அதிகம் நிகழ்கிறதாம். குறிப்பாக, குழந்தை பிறந்த இரண்டாவது மாதத்தில் இருந்து நாலு மாதம் வரைதான் ஆபத்து மிக அதிகம்.

சத்தம் இல்லாமல்... வலி இல்லாமல்... எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல்... குழந்தைகள் உறங்கும்போது திடுதிப்பென்று நிகழும் மரணம் இது.

பெரும்பாலும் இதுபோன்ற தொட்டில் மரணங்கள் குளிர்காலத்தில்தான் ஏற்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரி, எந்த மாதிரியான குழந்தைகளுக்கு இதுபோன்ற ஆபத்து ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்?

லிஸ்ட்டில் முதலில் வருவது ப்ரீமெச்சூர் குழந்தைகள்! அடுத்து குறிப்பிட்ட அளவு இல்லாமல், எடை குறைவாக இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த ஆபத்து இருக்கிறது. இன்னொரு முக்கியமான விஷயம்... ஆண் குழந்தைகளுக்கு ஆபத்து அதிகம் நிகழ வாய்ப்பிருக்கிறது.

இதெல்லாம் ஒரு பொதுவான கணக்குதான். இந்த பிரிவுகளில் உட்படாத குழந்தைகளுக்கும் இந்த ஆபத்து ஏற்படக்கூடும்.

குழந்தைக்கு இப்படியரு ஆபத்து ஏற்படுவதில் தாய்மார்கள் எந்த வகையிலாவது காரணமாகிறார்களா?

ஆமாம்.. இருக்கிறது! அனீமியா என்ற இரத்தசோகை நோயால் தாய் பாதிக்கப்பட்டிருந்தாலோ.. அல்லது குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் இருபதுக்கும் குறைவான வயதுடையவளாக இருந்தாலோ குழந்தைக்கு இந்த ஆபத்து நிகழலாம்.

தவிர, புகை பிடிப்பது, குடிப்பது, போதை மருந்து உட்கொள்வது போன்ற பழக்கங்களை உடைய தாய்க்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும், இந்த ஆபத்து நிகழ்வதற்கான வாய்ப்பிருக்கிறது.

இதையும் பொதுவாகத்தான் சொல்லலாமே தவிர, இந்தக் காரணத்தினால் இந்த ஆபத்து ஏற்படும் என்று திட்டவட்டமாக சொல்ல முடியாது! மேலே குறிப்பிட்ட பழக்கங்களோ, பிரச்சினைகளோ இல்லாத தாய்மார்களின் குழந்தைகளுக்கும் கூட, சத்தமில்லாத இந்த தொட்டில் மரணம் நிகழலாம் என்பதுதான் துரதிர்ஷ்டவசமான உண்மை!

சரி இப்படியரு ஆபத்து ஏற்படுவதற்கான காரணங்கள் எவை?

காரணம் என்னவென்று தெரிந்தால்தான், சத்தமில்லாமல் வரும் இந்த அசுரனை முற்றிலும் தடுத்துவிட முடியுமே! எதனால் இந்த ஆபத்து ஏற்படுகிறது என்பதற்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன... கூடவே அவற்றைப் பற்றியஆராய்ச்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன! ஆனாலும்கூட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் இந்த ஆபத்தை பெரிய அளவில் தடுக்க முடியும். இதோ கீழே சொல்லப்படும் விஷயங்களை கவனமாகப் பின்பற்றுங்கள்..

முதலாவது, குழந்தைகளை குப்புறப் படுக்க வைத்து உறங்க வைப்பதை கண்டிப்பாகத் தவிருங்கள். குப்புறப் படுக்க வைக்கும்போது குழந்தையின் உடல் எடை அதன் மென்மையான மார்பு எலும்புகளை அழுத்துவதால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

குழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்தே பழக்கவேண்டும். இப்படிப் படுக்க வைப்பதால் குழந்தைகளுக்கு மேலே சொன்ன ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 30_50 சதவீதம் வரைக்கும் குறைகிறது என்கின்றன ஆராய்ச்சிகள்!

பெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் புகைப்பிடிக்கக் கூடாது. நம்மூரில் பெண்களிடம் இந்தப் புகைப்பிடிக்கும் வழக்கம் அதிகம் இல்லைதான். ஆனால், தவிர்க்க முடியாமல் புகைப்பிடிப்பவர்களின் அருகாமையில் சில பெண்கள் இருக்க வேண்டியதாக இருக்கிறது. இதைத் தவிர்த்து விடுங்கள்.

கிராமப்புறங்களில் சுருட்டு போன்றவை பிடிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இவர்களும் இதைத் தவிர்த்துவிட வேண்டும்!

குழந்தைக்கு மனத்திருப்தியுடன் தாய்ப்பால் தாருங்கள்.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்த ஆபத்து ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது.

கட்டாயப்படுத்தி குழந்தைக்கு பால் புகட்டாதீர்கள். அது பசியால் அழும் நேரத்தில் பால் புகட்டினாலும் கூட, ஏப்பம் எடுத்துவிட்டபிறகே குழந்தையை படுக்கையில் கிடத்துங்கள்!

பொதுக் பொதுக் என்று அமுங்காத, உறுதியான ஒரு படுக்கையில் குழந்தையைப் படுக்க வையுங்கள்!

குழந்தை படுத்திருக்கும் அறையில் ‘நோ ஸ்மோக்கிங்’ என்று போர்டு வையுங்கள்.

குழந்தை அருகே கொசுவத்தி சுருள் ஏற்றி வைப்பதையும்கூட தவிர்க்கவும். அதன் புகையும்கூட குழந்தைக்குக் கெடுதல் விளைவிக்கும். கொசுவலை பயன்படுத்தி பழக்குங்கள்.

குடிப்பழக்கம் அல்லது போதை மருந்து பழக்கம் உடையவர்கள் யாராவது இருந்தால், கண்டிப்பாக அவர்களை குழந்தையின் அருகில் படுக்க அனுமதிக்க வேண்டாம்!

மொத்தத்தில் உங்கள் பட்டுப் பாப்பாவை கவனமாக பொறுப்புடன் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஒரு உண்மை என்ன தெரியுமா?

மேலை நாடுகளோடு ஒப்பிட்டால் நம் தமிழகத்தில் இப்படிப்பட்ட குழந்தை மரணங்கள் குறைவுதான்.

காரணம், மேலை நாடுகளில் குழந்தைகளைப் பெற்றோர் தனியாகப் படுக்க வைப்பதுதான். தனியாக படுப்பதால் கதகதப்பையும் ஒரு பிடிமானத்தையும் தேடி, குழந்தை குப்புற கவிழ்ந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம்! இதைப் போன்ற சமயங்களில் எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென்று தொட்டில் மரணம் நிகழ்கிறது.

நம்மூர்களில் பெரும்பாலும் நாம் நம் அணைப்பிலேயே குழந்தையை (மல்லாக்க) படுக்க வைத்து மென்மையாகத் தட்டிக் கொடுத்து தூங்க வைப்பதால், அந்த ஸ்பரிசமும், அணைப்பும் கிடைத்த நிம்மதியில் குழந்தை பெரும்பாலும் அப்படியே தூங்கிவிடுகிறது! அணைப்பும் ஆதரவும் எவ்வளவு முக்கியம் என்பதைப் பாருங்கள்!

ஒரு விஷயத்தை நான் முக்கியமாக இங்கு குறிப்பிட விரும்புகிறேன். எதிர்பாராத நிலையில் இதுபோன்ற சத்தமில்லாத ஆபத்தால் தங்கள் குழந்தையை இழந்த பெற்றோர்... குறிப்பாக அந்தத் தாய், தன் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்துவிட்டதோ என்ற குற்ற உணர்வுக்கு ஆளாகி அவர்கள் தங்களைத் தாங்களே வதைத்துக் கொள்வதுண்டு. இந்தக் குற்ற உணர்ச்சி தேவையற்றது. என்னதான் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் குழந்தையைப் பார்த்துக் கொண்டாலும் சத்தமில்லாத, சரியாகக் காரணங்கள் தெரியாத இந்த ஆபத்து நிகழ்வதை தவிர்க்க முடியாமல் போகலாம்.

தேவையில்லாமல் உங்களை நீங்களே வதைத்துக் கொள்வதில் எந்தப் பலனும் இல்லை. இப்படி பாதிப்பு ஏற்பட்டவர்கள் முதலில் ஒரு நல்ல மனோநல நிபுணரிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது!’’ என்றார் டாக்டர் பாலச்சந்திரன்.

சு.சசிரேகா
நன்றி - குமுதம்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.