சூழ்நிலையால் சுரண்டப்படும் குழந்தைகள்
மருச்சரன்
பெரிய ஆலமரம் ஒரு சிறிய விதைக்குள்ளே விதி செய்யப்படுவது போலவே ஒரு குழந்தை எதிர்காலத்தில் என்னவாக உருவெடுப்பான் என்பதற் கான சூழ்நிலைப்பதிவுகள் மூன்று வயதுக்குள்ளே கிரகிக்கப்படுவதாக புதிய உலகம் அறிந்திருக்கிறது.
மரபு வழிப் பண்புகளும் சூழ்நிலையும்தான் ஒரு குழந்தையின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. ஒரு குழந்தையின் சூழ்நிலை பெற்றோரால் மாற்றக் கூடியது. ஆனால் மரபு வழிப் பண்புகள் என்பது பெற்றோரையே மாற்றக் கூடியது. ஆகவே பிறந்து விட்ட பிறகு மாற்ற முடியாத ஒன்று மரபு வழிப் பண்பாகும்.
குழந்தைகள் தனது புதிய இதயத்தில் பதிவுகள் எதுவும் செய்யப்படாத மலர் இதழ் போன்ற மனத்தில், பெற்றோர் மற்றும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் அணுகுமுறையிலிருந்தும் அறிவிலிருந்தும் அவர்கள் நடவடிக்கையிலிருந்தும் கற்கத் துவங்குகிறது. மலர் இதழ் போன்ற பிஞ்சு மனதில் எத்தகைய பாடங்களும் பழக்க வழக்கங் களும் பதிய வேண்டும் என்பதைப் பற்றி பெற்றோர்கள் தான் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தங்கள் குழந்தைகளின் எதிர்கால லட்சியத்திற்கு ஏற்புடைய எண்ணங்களும் பழக்க வழக்கங்களும் பதிவதற்கு ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித் தருவது பெற்றோரது கடமையாகும்.
ஆளுமை வளர்ச்சி என்பது ஒருவன் இவ்வுலகில் பிறந்த சில நாட்களில் வளரத் தொடங்குகிறது. சில குழந்தைகள் மிகவும் சுறுசுறுப்பாய்ச் செயல்பட ஆரம்பிக்கின்றன. சில குழந்தைகள் மந்தமாய் உள்ளன. சிலர் மிகுதியாய் அழுகின்றனர். சிலர் அடங்கிப் போகின்றனர். சிலர் சூழ்நிலைக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்கின்றனர். சிலர் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றங்களால் மனமிழக்கின்றனர். இவை அனைத்துமே அந்தக் குழந்தைகள் தன் தாயின் கருப்பையில் கருவாக இருக்கும்போது ஏற்பட்ட பாதிப்புகளை பிரதிபலிப்பதே. இதனோடு குரோமோசோம்களின் அமைப்பினால் ஏற்படும் மாற்றம். இதையே பெற்றோருடைய மரபுவழிப் பண்பு என்பர்.
உளவியல் அறிஞர்கள் எத்தகைய சூழ்நிலையில் எத்தகைய பண்புகள் வளரும்? எதிர்காலத்தில் எத்தகைய ஆளுமைப் பெற்றிருப்பார்கள் என்பதை வெளியிட்டிருக்கிறார்கள். அதைப் பார்ப்போம்.
1. தன்னைப் பற்றிய விமரிசனத்தில் வளரும் குழந்தை : மற்றவர்களைக் கண்டனம் செய்யக் கற்றுக் கொள்கிறது.
2. பகைமைச் சூழலில் வளரும் குழந்தை : பிறருடன் சண்டையிடக் கற்றுக் கொள்கிறது.
3. பயத்தில் வளரும் குழந்தை : கவலைப்பட கற்றுக் கொள்கிறது.
4. பச்சாத்தாபச் சூழலில் வளரும் குழந்தை : தனது செயல்களை நினைத்து வருந்தக் கற்றுக் கொள்கிறது.
5. பொறாமைச் சூழலில் வளரும் குழந்தை : குற்ற உணர்வு கொள்ளக் கற்றுக் கொள்கிறது.
6. பாராட்டப்பட்டு வளரும் குழந்தை : மன உறுதியைச் சொந்தமாக்கிக் கொள்கிறது.
7. புகழ்ச்சிகளால் நிறைக்கப்படும் குழந்தை : மற்றவர்களைப் புகழ்வதில் பெருமிதம் கொள்கிறது.
8. சகிப்புத் தன்மையில் வளர்க்கப்படும் குழந்தை : பொறுமையை அணிந்து கொள்கிறது.
9. பிறரால் ஏற்றுக் கொள்ளப்படும் குழந்தை : பிறரை அன்பு செய்யக் கற்றுக் கொள்கிறது.
10. உற்சாகப்படுத்தப்படும் சூழýல் வளர்ந்த குழந்தை : தானாகக் கற்றுக் கொள்கிறது.
11. முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட குழந்தை : குறிக்கோளோடு செயல்படக் கற்றுக் கொள்கிறது.
12. பாகுபாடற்ற சூழலில் வளர்ந்த குழந்தை : நீதியுணர்வில் நிலைத்து நிற்கக் கற்றுக் கொள்கிறது.
13. நேர்மைச் சூழலில் வளர்ந்த குழந்தை : உண்மையின் பாதையில் விலகாதிருக்க கற்றுக் கொள்கிறது.
14. பாதுகாப்பான சூழலில் வளரும் குழந்தை : தன்னிலும் பிறரிலும் நம்பிக்கை வைக்கக் கற்றுக் கொள்கிறது.
"வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை சீக்கு' இது போன்ற பழமொழிகள் உருவாகக் காரணமே நல்ல பெற்றோருக்குப் பிறந்தும் தகாத சூழ்நிலை அமைந்து விடுவதுதான். நம் முன்னோர்கள் வேண்டுமானால் சூழ்நிலையின் சூட்சுமத்தை கருதாதிருக்கலாம். காலம் மாறி வரும் வேளையில் நம் வாரிசுகளுக்கும் நம் நாட்டின் வாரிசுகளுக்கும் நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்போம். அவர்கள் நாட்டிற்கு சுபநிலையை உருவாக்கித் தருவார்கள்.
nantri - tamil.sify.com