Freitag, Oktober 03, 2003

எது நல்ல கல்வி?

நான் வளர்கிறேனே மம்மி!

குழந்தைகள் தங்களுக்குள்ளே யுள்ள பட்டாம்பூச்சியை உணர்ந்து கொள்ள உதவுவதுதான் உண்மையான கல்வி. ஒவ்வொரு குழந்தையும் தாங்கள் என்னவாகப் போகிறோம், என்னென்ன ஆற்றல்கள் தங்களுக்குள் புதைந்திருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்வது பள்ளிப்பருவத்தில்தான். பள்ளிப்பருவம் எவ்வளவு மகத்தான காலகட்டம் என்பதை பெற்றோரும் ஆசிரியரும் புரிந்து கொண்டு குழந்தைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால், அவர்களின் வாழ்க்கை ஒளிமயமாகும்.

குழந்தைகள் தங்களுக்குள்ளிருக்கும் திறமைகள் என்ன என்பதை அவர்களே புரிந்து கொள்ளக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் பெற்றோர் மற்றும் ஆசிரியரின் கடமையாகும். அதிலும் கண்பார்வையற்ற காது கேளாத குழந்தைகளின் பெற்றோருக்கு இப்பொறுப்பு இன்னும் அதிகம். பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் இணைந்து, கலந்தாலோசித்து ஒவ்வொரு நிலையிலும் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும். குழந்தைகளின் ஆற்றல் வெளிப்பட உங்களது சிறிய தூண்டுதல் போதுமானது. தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராயவும், பரிசோதனைகளைச் செய்யவும், பாடங்களைக் கற்றுக் கொள்ளவும் குழந்தைகளிடம் ஏராளமான ஆற்றல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

பீஜோ என்ற மேல்நாட்டு கல்வி நிபுணர், வளரும் குழந்தைகளின் பாடத்திட்டத்திற்கான அடிப்படை நோக்கமாகக் குறிப்பிடுவது... குழந்தைகள் தங்கள் சூழலில் அதிகபட்ச வளர்ச்சியை அடைய உதவ வேண்டும் என்பதுதான்.

ஜோஹன் பெஸ்ட்லோசிஸ் என்ற மேல்நாட்டு அறிஞர், ‘குழந்தைகளின் கல்வியானது, அவர்களது இயற்கையான வளர்ச்சியை அடிப்படையாக வைத்திருக்க வேண்டும்', என்று வலியுறுத்தினார். அம்மாக்கள்தான் சிறந்த ஆசிரியர்களாக இருக்க முடியும் என்றும், வீடுதான் சிறந்த பள்ளிக்கூடமாக இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

குழந்தைகள் விளையாட்டின் மூலம் பாடம் பயிலும், கிண்டர்கார்டன் என்ற முறை 1930 ஜெர்மனியில் உருவானது. ஒரு குழந்தை முழு மனிதனாக உருவாக இந்த கிண்டர் கார்டன் கல்வி முறை உதவும் என்ற எண்ணத்தில் ஃபிரெட்ரிக் ஃப்ரீவெல் என்பவர் உருவாக்கினார். வளர்ந்த குழந்தைகளின் பாடத்திட்டத்தைவிட வித்தியாசமான கல்வித்திட்டம் இளங்குழந்தைகளுக்கு தேவை என்பதால், களிமண் பொம்மை செய்தல், வரைதல், பிளாக்குகளைப் பயன்படுத்தி கற்றல் போன்ற வழிமுறைகளை அறிமுகப்படுத்தினார். கே.ஜி. வகுப்புகளிலிருந்து முதல் வகுப்பில் அடியெடுத்து வைக்கும் குழந்தைக்கு பய உணர்ச்சி ஏற்படுவது இயற்கையே. கே.ஜி. வகுப்புகளில் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்தாக வேண்டும் என்பது போன்ற கட்டளைகளை அதிகம் திணிக்க மாட்டார்கள். விரும்பிய நேரத்திற்கு பள்ளிக் கூடத்துக்கு பெற்றோருடன் சென்று கொண்டிருந்த குழந்தை, முதல் வகுப்பிற்குள் நுழையும்போது சில ஒழுங்கு முறைகளைப் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறது. பசிக்கும் போது சாப்பிடலாம், தூக்கம் வந்தால் தூங்கலாம் என்று கேஜி. வகுப்புகளில் பழகிய குழந்தைக்கு முதல் வகுப்பின் சூழல் முற்றிலும் புதிதாயிருக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் வகுப்பிற்கு வந்தாக வேண்டும், உணவு இடைவேளையின் போதுதான் சாப்பிட வேண்டும் என்பன போன்ற சில கட்டளைகளைப் பின்பற்ற வேண்டி யிருக்கிறது. இதனால்தான் முதல் வகுப்பில் சேர்ந்த சில நாட்களிலேயே பள்ளிக்குப் போகமாட்டேன் என்று குழந்தைகள் அடம் பிடிப்பார்கள்.இரண்டு வருடங்களாக அனுப்பிய அதே பள்ளிதானே.அப்போதெல்லாம் அழாமல் சென்ற குழந்தை இப்போது ஏன் அடம் பிடிக்கிறது என்று புரியாமல் பெற்றோர்கள் விழிப்பார்கள். காரணம் இதுதான்.

புதிதாக விதிக்கப்பட்டுள்ள விதிகளைப் பார்த்து குழந்தை பயப்படுகிறது. அடுத்து, இதுவரை குழந்தையாக மதிக்கப்பட்ட நம்மை இப்போது பெரியவனாக்கி பார்ப்பதையும், திடீரென தம் மேல் பொறுப்புகள் சுமத்தப்படுவதையும் அது விரும்புவதில்லை.

இந்நிலையைத் தவிர்க்கத்தான் ‘இயற்கையோடு இணைந்த கல்விமுறை’ என்ற அமைப்பை ரவீந்திரநாத் தாகூர் வலியுறுத்தினார். மேலை நாடுகளில் பிரபலமானமுறை இது. வகுப்பறை, மேஜை, நாற்காலி, பிரம்பு என பயமுறுத்தும் வழக்கமான விஷயங்கள் இல்லாமல், மரம், செடி கொடிகளுக்கிடையே வகுப்புகள் நடத்தும் வித்தியாசமான முறை இது. இந்த முறை எல்லா பள்ளிகளிலும் பின்பற்றலாம். பள்ளி என்றாலே ஏற்படும் பயத்தை அகற்றி, விருப்பத்தோடு முன் வந்து மாணவர்களே கற்றுக் கொள்வர்.

முதல் வகுப்பு குழந்தைகளுக்கு ராகம் போட்டு பாடல்களைக் கற்றுத்தரும் முறை நம் பள்ளிகளில் உள்ளது. இது மிகவும் பயனுள்ள பாடமுறை. வகுப்பறையில் இப்படி பாட்டுப் பாடி விஷயங்களைக் கற்றுக் கொள்ளும் குழந்தை வீட்டிலும் ராகம் போட்டுப் பேசும். வாய்விட்டு, சத்தமாக எல்லாரும் சேர்ந்து படிக்க வேண்டும் என்பதால், வகுப்பறையில் சக மாணவர்களோடு சேர்ந்து சத்தமாக பாட்டுப் பாடும் குழந்தை வீட்டில் ‘சாப்பாடு வேண்டுமா?’ என்று கேட்டால் கூட ‘ஆமாம், வேண்டும்...’ என்பதை பத்து வீட்டிற்கு கேட்கும்படி சத்தமாய் சொல்லும். வகுப்பறையில் சத்தமாகப் பேசிப் பழகியதன் காரணமாகத்தான் இப்படி பேசுகிறது என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு, ‘ஏன் எட்டு ஊருக்கு கேட்கற மாதிரி கத்தற?’ என்று முதுகில் அடிக்கக்கூடாது.

இந்த வயதுக் குழந்தைகள் வீட்டில் நாம் சொல்லித் தரும் பாடங்களை உன்னிப்பாகக் கவனிக்கமாட்டார்கள். ம்...ம் என்று கேட்டுக் கொண்டேயிருப்பார்கள். திடீரென 'அம்மா, பக்கத்து வீட்டுல சினிமா ஓடுது. நாமும் டி.வி போடலாம்...' என்பார்கள். ‘அப்ப, இவ்வளவு நேரம் நான் சொல்லிக் கொடுத்த பாடத்தை கவனிக்காம, பாட்டு கேட்டுகிட்டிருந்தியா?’ என்று கேள்வியெழுப்பாதீர்கள். இந்த வயதில் கவனக்குறைவும், கவனச்சிதைவும் ஏற்படுவது இயல்புதான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

முதல் வகுப்பு படிக்கும் குழந்தைகளால் அதிகநேரம் ஒரே மூச்சாய், கவனமாய் பாடத்தை கவனிக்க முடியாது. சில குழந்தைகள் பாதிபடிப்பிலேயே தூங்கி வழியும். புத்தகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டேயிருக்கவும் முடியாது. பத்து நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து பாடம் சொல்லித் தந்து வெறுப்பேற்றாதீர்கள். அவ்வப்போது இடைவெளி அவசியம். பதினைந்து நிமிடங்கள் படித்தாயா? சரி, கொஞ்ச நேரம் விளையாடு’ என்று அனுப்பி வையுங்கள்.

இல்லாவிட்டால் படிக்கும் முறையையாவது மாற்றுங்கள். பத்து நிமிடங்கள் கணக்குபாடம் படித்துவிட்டால், அடுத்து தமிழ் அல்லது ஆங்கில ரைம்ஸ்களுக்கு நேரம் ஒதுக்கிவிடுங்கள். அதுவும், உட்கார வைத்து சொல்லித் தராமல் ரைம்ஸ் அடங்கிய ஒலிநாடா, அல்லது சி.டி.களைப் போட்டு அதைக் கேட்கச் செய்யலாம். இப்படி டேப்பில் பாடலாக கேட்கும்போது இன்னும் ஆழமாக மனதில் பதியும்.

இதே போல் கதைகள் அடங்கிய ஒலிநாடாக்களையும் கேட்கச் செய்யலாம். வார்த்தைகளைச் சரியாக உச்சரித்துப் பழக இவை உதவும்.

அதிக நேரம் டி.வி. பார்க்கும் பழக்கத்தை குறைக்க வைத்து, புத்தகம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துங் கள். அதே போல், க்ரெயான்கள் மற்றும், கலர் பென்சில்களால் அவர்கள் வரையும் படங்களை வீட்டுச் சுவரில் மாட்டி வையுங்கள். மறக் காமல் உங்கள் உறவினர் கள் வரும்போது, இது இவன் வரைந்த படம் என்று பெருமையாய் சொல்லுங்கள். மற்றவர்களின் பாராட்டு, ஆதரவும் இன்னும் இதைப் போல நிறைய செய்ய வேண்டும் என்ற உற்சாகத் தையும், ஊக்கத்தையும் ஏற்படுத்தும். நேரடியாக வற்புறுத்தி செய்யச் சொல்வதை விட, இப்படி பாராட்டுவதன் மூலம் உங்கள் குழந்தையின் திறமையை வளர்க்கலாம்.

நன்றி - அரும்பு

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.