Dienstag, August 03, 2004

கண் பராமரிப்பு

கரு உருவான பத்திலிருந்து பன்னிரண்டு வாரங்களில் அதன் கண் உருவாகிறது. அப்போது இமைகளும் உருவாகிவிடுகின்றன. அதற்குப் பிறகு கண்ணிலுள்ள பாப்பாவும் பிற தசைகளும் தொடர்ந்து வளரத் தொடங்குகின்றன.

ஐந்திலிருந்து ஆறு மாதமானபோதே குழந்தை வயிற்றுக்குள் கண்ணைத் திறந்து பார்க்கத் தொடங்கிவிடுகிறது.

நார்மலான குழந்தைக்கு, பிறந்தவுடன் ஸ்பெஷலாக எந்தக் கண் பராமரிப்பும் தேவையில்லை.

அதுமட்டுமல்ல, பச்சிளங்குழந்தையின் கண்களிலுள்ள வெள்ளைப் படலம் மிக மெல்லியதாக இருப்பதால் பார்ப்பதற்கு லேசான நீல வண்ணத்தில் காட்சி தரலாம். சில அம்மாக்கள் பதற்றத்துடன் ‘டாக்டர்... குழந்தையோட கண்ணு நீலமா இருக்கே’ என்பார்கள். கவலைப்பட வேண்டாம். தானாக சரியாகிவிடும்.

வேறு சில குழந்தைகளின் கண்களிலுள்ள வெள்ளைப் பகுதியில் சிகப்புப் புள்ளிகள் காட்சி தரும். இவை அம்மாவைப் பதற வைக்குமளவுக்கு எங்களை அச்சம் கொள்ள வைக்காது. காரணம், பிரசவத்தின்போது ஏற்படும் அழுத்தத்தால் கண்களிலுள்ள மெல்லிய ரத்தக் குழாய்களில் சில வெடித்துவிடுகின்றன. அதனால்தான் கண்கள் சிவந்து காணப்படுகின்றன. குழந்தை பிறந்த இரு நாட்களில் இது தானாக சரியாகிவிடும்.

பிறந்த குழந்தை பல நேரங்களில் கண்களை மூடிக்கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. தவிர இப்போதுதான் பிறந்த குழந்தையால் கூட ஒரு தூரம் வரை உள்ள பொருள்களைப் பார்க்க முடியும். இது இயல்பாக நடந்தேறிவிடும். எனவே பிறந்தவுடன் குழந்தையின் கண்களை டாக்டர் தூண்டிவிட வேண்டும் என்று அம்மா எதிர்பார்க்கத் தேவையில்லை.

அதேபோல் குழந்தையின் கண்களிலிருந்து வெள்ளையாக ஒட்டிக் கொள்ளும் பொருள் வெளியே வருவது இயல்பானதே. சுத்தமான பஞ்சில் தண்ணீரைத் தொட்டு கண்களைச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு முக்கிய விஷயம் வெறும் கைகளினால் கண்ணிலுள்ள புளிச்சை, நீர் ஆகியவற்றை எடுப்பதன் மூலமே தொற்றுநோய்கள் அங்கு சேர்ந்து கண்களைப் பாதிக்க வாய்ப்பு உண்டு. எனவே சுத்தம் தேவை.

சில நிமிடங்களுக்கு முன்பு பிறந்த குழந்தை. இன்னமும் கண் திறக்கவில்லை. மற்றபடி அழுகை, தாய்ப்பால் அருந்துதல் போன்றவை இயல்பாக நடந்தேறிவிட்டன.

அம்மாவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வருகிறது. ‘‘டாக்டர், குழந்தை ஏன் இன்னும் கண்ணைத் திறந்து பார்க்கலே? கண் பார்வையிலே ஏதாவது கோளாறு...?’’ மேலே பேசமுடியாமல் அம்மா விசும்புகிறாள்.

சில சமயம் கைக்குழந்தையின் ஒரு கண்ணில் மட்டும் தண்ணீர் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

பெரியவர்களே கூட தங்கள் கண்களுக்கு ஏதாவது பாதிப்பு என்றால் கண் மருத்துவரிடம் அலறிக்கொண்டு ஓடுவார்கள். அப்படியிருக்க குழந்தைக்குக் கண்களில் ஏதோ சிக்கல் என்றால் தாய் பதறிப் போவது இயல்புதான். ஆனால், அம்மா ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தாயின் கருவுக்குள் இருக்கும்போது குழந்தை மிகவும் பாதுகாப்பாக, தொற்று வியாதி என்பதே இல்லாத நிலையில், ஸ்டெரைல் எனப்படும் சூழலில் இருக்கும். ஆனால் இந்த பூமியில் பிறந்து சுவாசிக்கத் தொடங்கிய உடனேயே சில தொற்றுக் கிருமிகள் குழந்தையைப் பாதிக்கக்கூடும். இதன் விளைவாக கண் இமைகள் ஒட்டிக்கொள்வதும், விடாது கண்ணீர் வழிவதும் நடைபெறலாம். இப்படி நிகழ்ந்தால் அதற்கு ஆன்ட்டிபயாடிக் சொட்டு மருந்தை அந்தப் பகுதியில் விடுவதன் மூலமும், மிருதுவாக மசாஜ் செய்துடுவதன் மூலமும் கண்களைச் சரிசெய்வோம்.

சில குறிப்பிட்ட சீசன்களில் குழந்தைகள் ‘மெட்ராஸ் ஐ’ என்று பரவலாக அறியப்படும் கண்நோயினால் அவதிப்படலாம். சில குழந்தைகளின் கண் இமைகள் சிவந்துபோய் ஒட்டிக்கொள்ளலாம். சில சமயம் இந்த நோய் மிகவும் அதிகமாகி, Êஏதோ ரத்தம் கசிகிறதோ என்னுமளவுக்குக் கண்கள் செக்கச்செவேல் என்று ஆகலாம். சில சமயம் சுற்றியுள்ள பொருளின் ஒவ்வாமைக் காரணமாகவும் குழந்தையின் கண்களில் பாதிப்பு ஏற்படக்கூடும். சிலவகை ரசாயனப் பொருள்கள் இந்த அலர்ஜிக்குக் காரணமாக அமையக்கூடும். சில பள்ளிக்கூடங்களில் உள்ள நீச்சல் குளங்களில் தண்ணீர் சுத்தமாக இருக்கவேண்டும் என்பதற்காக அதிக அளவில் குளோரின் கலப்பதுண்Êடு. இதன் காரணமாகவும் குழந்தையின் கண்களில் பாதிப்பு ஏற்படலாம்.

பிறக்கும்போதே கேட்ராக்ட் குறைபாடு கொண்ட குழந்தைகளும் உண்டு.

கர்ப்பம் தரித்த மூன்றாவது மாதத்தில் ரூபெல்லா, அம்மை ரிக்கெட்ஸ் போன்ற நோய்களால் அம்மா பாதிக்கப்பட்டால், குழந்தையின் கண் உறுப்புகள் பாதிக்கப்படலாம். காரணம், இந்தக் காலகட்டத்தில்தான் குழந்தையின் கண் சரியான வடிவம் பெறுகிறது. அப்போது கண்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு காட்ராக்ட் உண்டாகலாம். நாளடைவில் மறைத்துள்ள விழித்திரைகளை நீக்கிவிட்டு லென்ஸ் பொருத்தி குறைபாடை சரிசெய்வோம்.

குழந்தை பிறந்த ஐந்தாறு மாதங்களில் அதற்கு (ஒன்றரைக் கண் என்று கொச்சையாக அழைக்கப்படும்) மாறுகண் என்று முடிவெடுத்துவிடக்கூடாது. காரணம் அப்போதுதான் கண் தசைகள் வளர்கின்றன. ஆறு மாதங்களுக்குப் பிறகும் மாறுகண் புலப்பட்டால் மட்டுமே சிகிச்சைக்காக டாக்டரை நாடலாம். அதுவும் குழந்தைக்கு ஒரு வயதாகியும் மாறுகண் தொடர்கிறதென்றால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும். கண்தசைகளின் பலவீனத்தால் இப்படி நேரலாம். அதே சமயம் ஒரு விழியின் பார்க்கும் திறன் மிகவும் குறைவாக இருந்தால், இன்னொரு கண் மிகவும் சிரமப்பட்டு மேற்படி குறைபாட்டைச் சரிசெய்ய முயலும். இந்தக் கட்டத்தில் குழந்தை தலையைச் சாய்த்து பார்க்கத் தொடங்கும். அல்லது ஒரு கண்ணை அடிக்கடி மூடிக்கொண்டு இன்னொரு கண்ணினால் மட்டுமே பார்க்கத் தொடங்கும். குழந்தைக்கு ஒரு வயது ஆகும்போது அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்து விடலாம். பத்து வயதாகும்போது மூக்குக்கண்ணாடி தேவைப்பட வாய்ப்புண்டு.

பார்வைத்திறன் இல்லாமல் சில குழந்தைகள் பிறக்கும்போது ‘‘இறந்தவங்க கண்ணை என் குழந்தைக்கு பொருத்த முடியாதா டாக்டர்?’’ என்று பரிதாபமாகக் கேட்கும் பெற்றோர் உண்Êடு. ஆனால் இப்போதைக்கு இது முடியாத காரியம். காரணம் குழந்தையின் விழித்திரை நன்கு வளர்ச்சியடையாத காரணத்தால், மாற்றுக்கண் பொருத்துவதால் பலன் இருப்பதில்லை. என்றாலும் இது தொடர்பாக தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

நற்செய்தி வரும் என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்.

கண்ணுக்கும் மூக்குக்கும் இடையே உட்புறமாக இயற்கை ஒரு சிறிய ஓட்டையை இடம்பெறச் செய்திருக்கிறது. இது அடைத்துக்கொண்டாலும் கண்ணிலிருந்து நீர் பெருகும். சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே இந்தத் துவாரம் அடைபட்டிருக்கும். அல்லது சளியின் காரணமாகவும் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். கண் பகுதியின் அருகே மிருதுவாக நன்கு மசாஜ் செய்வதன் மூலம் இந்த அடைப்பு நீங்கக்கூடும்.

சில சமயம் குழந்தைக்கு ஆறுமாதம் ஆனவுடன் கண் டாக்டர் மெல்லிய நுட்பமான ஊசியின் மூலம் இந்தப் பகுதியில் துளையிட்டு அடைப்பை நீக்கலாம். இது வெகு சாதாரணமான சிகிச்சைமுறை. பயப்பட எதுவுமில்லை.

குழந்தைக்கு நான்கிலிருந்து ஆறு வயதாகும்போது கண் டாக்டரிடம் காண்பித்து பரிசோதனை செய்துகொள்வது நல்லது. பார்வையில் ஏதாவது குறைபாடு இருந்து, கண்ணாடி அணிய வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால் அதற்குரிய நடவடிக்கையை எடுக்கலாம். முக்கியமாக, பெற்றோர் தடித்த மூக்குக் கண்ணாடிகளை அணிந்திருந்தால் குழந்தைக்குத் தவறாமல் இந்த சோதனையைச் செய்ய வேண்டும்.

நிறக்குருடு எனப்படும் நிலை உங்கள் மகனுக்கு (பெண் குழந்தைகளுக்கு மிக மிக அரிதாகவே இந்தக் குறைபாடு ஏற்படுகிறது) ஏற்பட்டிருந்தால் அதை உங்களாலேயே கண்டுபிடிக்க முடியும். முக்கியமாக சிவப்பு மற்றும் பச்சை வண்ணங்களை இனம் பிரிப்பதுதான் பிரச்னை ஏற்படும்.

குழந்தையில் கண்கள் பாதிப்பு என்பதில் மூன்றில் ஒரு பங்கு அடிபட்டுப் போவதால்தான். தெருவில் யாராவது வீசும் சிறு கல் கண்ணில் படுவது, கிரிக்கெட் பந்து தாக்குவது போன்ற காரணங்களினால் கண்திரை விலகிவிடலாம். உடனடியாக முதலுதவி செய்துவிட்டு உடனே டாக்டரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். முதல் உதவி என்றால்? குளிர்ந்த நீரில் நனைக்கப்பட்ட சுத்தமான துணியை மடித்து பாதிக்கப்பட்ட கண்ணின்மீது வைப்பதுதான்.

குழந்தையின் கண்களில் தூசி விழுந்தால் கண்ணைக் கசக்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டாம். டூவீலரில் குழந்தையை எடுத்துச் செல்லும்போது தூசியோ சிறு பூச்சிகளோ குழந்தையின் கண்களில் விழலாம். முடிந்தால் நீர் நிறம்பிய ஒரு பேசினில் குழந்தையின் கண்களை முக்கி எடுங்கள். பொதுவாக சிறுவர் சிறுமிகளை டூவீலரில் அழைத்துச் செல்லும்போது அவர்களுக்கு பவர் இல்லாத கண்ணாடிகளை அணியச் செய்வது நல்லது.

கண்ணில் சோப்போ, சிரப்போ, ஃபினாயிலோ, பெர்ஃப்யூமோ விழுந்து தொடர்ந்து எரிச்சல் இருந்தால் அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாக டாக்டரிடம் காட்ட வேண்டும்.

சந்திப்பு, கட்டுரை: ஜி.எஸ்.எஸ்.
nantri-kumutham

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.