Samstag, September 02, 2006

முரண்களுக்குள் தொலையும் முழுமை

- அர்த்தநாரி -
குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த்திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும், இரண்டாம் உலகும் மாறவேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று.

இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு. குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப்பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்றவகையில் களைதலே முதல் மேற்கொள்ளப் பட வேண்டிது.

பலம், பலவீனம், தோற்றமைவு, அறிவு, நடத்தை, திறமை என்பன ஒன்றிணைந்து தற்கருத்தை தோற்றுவிக்கும். "இது அப்பாவின் செல்லம்", "இது என்ரை திரவியம்" போன்ற பிணைப்பைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் சுழியன், கெட்டிக்காரன் போன்ற திறமையைக் குறிக்கும் சொற்பிரயோகங்கள் குழந்தை மனதில் ஆக்கபூர்வமான தற்கருத்தை ஏற்படுத்தி அதன் மூலம் திருப்தி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை ஏற்படுத்துவதனூடாக ஆளுமை விருத்திக்கு இட்டுச் செல்லும். மாறாக 'முட்டாள்', 'எருமை', 'தேவாங்கு' போன்ற சொற்பிரயோகங்கள் எதிர்மறைக் கருத்து நிலையை தோற்றுவித்து மன அழுத்தம், கோபம், ஒதுங்கிப் போகும் தன்மை என்பவற்றிற்கு இட்டுச் செல்லும்.

கண்டதையும் போட்டுடைக்கும் குழந்தையின் நடத்தைக்கு 'சுட்டித்தனம்' எனப்பெயரிட்டு குழந்தை எதிரிலேயே 'குளப்படிக் கந்தன்', 'முரட்டுச்சாமி' எனப் பெருமைப்படும் பெற்றோரோ பேரன் பேத்தியோ தமது செயல் ஊக்குவிக்கப் படுகின்றது என்ற மனோபாவத்தை குழந்தை மனதில் ஏற்படுத்தி, மேலும் மேலும் செய்யத் தூண்டும் ஆக்கிரமிப்பு மனோபாவத்திற்கு தாம் வழி கோலுகின்றோம் என்ற யதார்த்தத்தை உணர மறந்து விடுகின்றனர்.

'ஊத்தை, பினாட்டு, உறண்டை' போன்ற அசுத்தத்தைக் குறிக்கும் பிரயோகங்கள் சுத்தம் தொடர்பான கருத்து நிலையை மறக்கடித்து 'அழுக்கே சொர்க்கம்' என்ற மன நிலையை வளர்த்து விடக் கூடியது. 'கறுப்பி, மரமண்டையன், முழியன், கட்டைச்சி' போன்ற உருவமைப்பை குறிக்கப் பயன்படுத்தும் சொற்பதங்கள் குழந்தைக்குத் தன் தோற்றமைவு தொடர்பான தாழ்வு உணர்ச்சிக்கே இட்டுச் செல்வது மட்டுமன்றி பல அபாயகரமான பின் விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடியவை.

முழுக்க முழுக்க தகப்பனின் சாயலில் பிறந்த குழந்தையை அதனது பெயரில் அழைக்காது "மணியண்ணை வாங்கோ" என்று அதனது தகப்பனது பெயராலேயே அழைத்ததன் விளைவு தகப்பனின் பண்பற்ற தனத்தையும் குடிகாரக் குணத்தையும் சேர்த்தே குழந்தை உள்வாங்கிக் கொள்ள காரணமாயிருந்திருக்கின்றது.

சில இடங்களில் தாம் பிறந்தகையுடனோ அல்லது சிலகாலம் செல்லவோ தாயை அல்லது தகப்பனை இழந்துவிடும் குழந்தையை "தாயைத்தின்னி" என்றோ "தேப்பனைத் தின்னி" என்றோ பெரியோர் கூப்பிடுவதைப் பார்க்கின்றோம். இது தாழ்வுணர்ச்சியை உருவாக்கி பல அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தவல்லது என்பதை நாம் உணரத் தவறி விடுகின்றோம். தேடலுக்கு ஒரு வேட்டு தன்னைத்தானே ஆராயும் நிலையை அடைதல் மனித வாழ்வில் பலருக்கு சாத்தியப் படுவதேயில்லை. ஆனால் தன்னைச் சுற்றியுள்ள சுற்றுப்புறத்தை ஆராயும் பண்போ குழந்தைப் பருவத்தின் மூன்றாவது வயதில் தொடங்கி எட்டாவது வயதில் தீவிரமாகச் செயற்படத் தொடங்கி விடுகின்றது. மூன்று வயதுக் குழந்தை ஒன்றின் ஏன், எதற்கு, எப்படி? என்ற வினாக்கள் மேதைகளையும் ஆட்டம் காண வைப்பவை.

குழந்தையின் சொல்லாட்சியில் மிகப் பெரும் பகுதியை ஆக்கிரமித்துள்ள வினாவாக்கியங்களை தீர ஆராய்ந்தோமானால் பெரும்பாலும் கண்முன்னே குழந்தை காணும் காட்சிகளையும், பொருட்களையும் பற்றியதாகவே அவை இருக்கும். "மழை எப்படி பெய்யுது? கத்தி ஏன் வெட்டுது? நாய் ஏன் வாலையாட்டுது?" போன்ற வினாக்கள் புலன்வழித் தொடர்புள்ளவை. ஆகக் குறைந்தது வீட்டில் பயன்படுத்தும் பொருட்களின் பின்னணியையாவது "அப்படியாம் இப்படியாம்" என்று 'கேள்விச் செவியன்' நிலையில் இல்லாது காரண காரியத் தொடர்புடன் பதிலளிக்க முயற்சித்தால் குழந்தையின் துருவி ஆராயும் பண்பை தேடலுக்கான களமாக மாற்ற முடியும். (பொருட்கள், இயற்கை நிகழ்வுகள் தொடர்பான தெளிவான இலகுவான விளக்கங்களைக் கொண்ட நூல்கள் நூலகங்களில் நிரம்பி வழிகின்றன என்பதையும் இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.) ஆனால் பெரும்பாலும் நடப்பது.? கேள்விகளால் துளைத்தெடுக்கும் குழந்தையை "அலட்டல், தொணதொணப்பு, கிழட்டுக்கதை, அரியண்டம்" என்றும் அது போதாவிட்டால் "பிள்ளைபிடிகாரன் வாரான், பூதத்தைத் கூப்பிடுவன்" என்றும் அதுவும் போதாவிட்டால் "ஆக்கினை கூடிப்போச்சு, பள்ளிக்கு கெதியாச் சேர்த்தால்தான் சரி" என்றும் குழந்தையின் தேடலை முளையிலேயே கிள்ளியெறிதலே பரவலாக நடைபெறுவதாகும்.

துருவி ஆராயும் பண்பானது கேள்விகளால் துளைத்தெடுப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. அது பொருட்களை புதிதாக தாமே முயன்று உருவாக்கும் தூண்டலை குழந்தையிடம் உருவாக்கக் கூடியது. கோயில் திருவிழாவில் வாங்கிக் கொடுக்கும் பம்பரமோ, ஊதுகுழலோ வீடு வந்து சேர்வதற்கிடையில் அக்குவேறு ஆணிவேறாய்க் கழற்றப் பட்டிருப்பதும், மை தீர்ந்த ஒறெக்ஸ் பேனாவின் மேல்மூடியும் கீழ்மூடியும் அகற்றப்பட்டு உடற் பகுதிக்கு இறப்பர் வளையம் பொருத்தி தென்னம் ஈர்க்கு பயன்படுத்தி ஏவுகணை விடுவதும் புதிதாய் உருவாக்கும் முயற்சியின் வெளிப்பாடுகளே என்பதை பலர் அறியும் வாய்ப்பு இல்லை. இன்று பெரும்பாலும் வீடுகளையும் முன்பள்ளிகளையும் நிறைத்திருப்பது உருவாக்க சக்தியை தூண்டாத பிளாஸ்ரிக் விளையாட்டுப் பொருட்களே. இதனால்தான் வாங்கிய சிறு காலத்துக்குள்ளேயே இவை அங்கொன்றும் இங்கொன்றுமாக தேடுவாரற்றுக் கிடப்பதும், புதுப்புது உருவாக்கத் திறனுக்குக் களம் அமைக்கும் மண் விளையாட்டு பெற்றோர் தடைச்சட்டம் போட்டாலும் கூட குழந்தைப் பருவத்தின் மிகவும் விருப்புக்குரிய விளையாட்டாகத் தொடர்ந்து நிலைத்திருப்பதும் உருவாக்கத்திறனை அதிகரிக்காத எதுவுமே குழந்தை மனதில் இடம்பிடிக்காது என்பதையே வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

முரண்களுக்கும், முரண்களுக்குமிடையே குழந்தையை வார்க்கும் முதலாவது பள்ளி குடும்பமென்றால் அதனைச் செப்பனிடும் அடுத்த பள்ளி பள்ளிக்கூடமே. குழந்தையின் துருவியாராயும் பண்பை, சந்தேகங்களை, தேடலைத் தீர்த்து வைப்பதில் இவை பெரும்பங்கு வகிக்கின்றன. குழந்தை பிறந்த கையுடனேயே தமக்கிடையில் நூறாயிரம் கோடி இணைப்புக்களை ஏற்படுத்தும் மூளையின் நியூரோன்களில் பயன்படுத்தப் படாதவற்றை உடனே மூளை தூக்கி வீசிவிடுமாம். தூண்டலை ஏற்படுத்தக் கூடிய சூழலும், அரவணைப்பும் எவ்வளவு கூடுதலாக இருக்கிறதோ அந்தளவுக்கு இந்த நியூரோன்களின் இணைப்பும் அதிகரிக்கிறதாம். மூன்று வயதுக்கிடையில் நன்கு அரவணைப்புக் கிட்டாத, தூண்டல் அற்ற குழந்தை இலகுவில் மாற்றமுடியாத குணாம்சங்களைத் தனக்குரியதாக ஆக்கிவிடும். இதனடிப்படையில் "பிறப்புக்கு முந்திய குழந்தையின் மூளை விருத்திக்கு எம்மால் உதவ முடியாவிட்டாலும் கூட நன்கு திட்டமிட்ட முன்பள்ளித் திட்டங்கள் மூலம் குழந்தையின் பிறப்புக்கு பின்னர் உள்ள கால கட்டங்களிலாவது நாம் நிறைய மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்ற குழந்தை நரம்பியல் நிபுணரான பிளரி சூகானியின் கூற்று கருத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று. ஆனால் பெரும்பாலும் நாம் பார்ப்பது, '2-2' வயதுக்குள்ளேயே குழந்தையை முன்பள்ளியில் ஒப்படைத்து விட்டு சற்று ஆறுதலாக இருக்கக் கிடைத்தது வாய்ப்பென்று நினைக்கும் அன்னையரும், அறிவும், அனுபவமும், உடல் உள முதிர்ச்சியின்மையும் நிறைந்த ஆசிரியைகளை கொண்ட பெரும்பாலும் குழந்தை பராமரிப்பகங்களாக இருக்கும் முன் பள்ளிகளுமே. குழந்தையின் எதிரிலேயே அதன் சகோதரர்களை உறுக்குவதற்கு பெற்றோர் பயன்படுத்தும் "ரீச்சரிட்டைச் சொல்லி அடிவாங்கித் தாறன்", "இவனை கட்டி அவிழ்க்க ஏலாது. பள்ளிக்கு அனுப்ப வேண்டும்" என்ற சொற்பதங்கள் தேடலுக்கு களமாக இருக்க வேண்டிய பாடசாலைகளைச் சிறைச்சாலைகளாக உருப்படுத்தி காட்டுவதனால்தான் அழுகையும் புலம்பலுமாக சில சமயம் அடியும் குத்துமாக பிள்ளைகள் பெற்றோரால் பள்ளிக்கு இழுத்துச் செல்லப்படும் காட்சிகளை நாம் காண முடிகின்றது.

இதற்கு மாறாக, குழந்தையின் தேடலுக்கு களமமைத்துக் கொடுக்கக் கூடிய வீட்டுச் சூழலில் வளரும் குழந்தையானது பெருத்த கனவுகளுடனும் ஆர்வத்துடனும் பள்ளியை அணுகும் சந்தர்ப்பங்களில் அதனது தேடல் பசிக்கு போதிய தீனி கிடைக்காமல் போகும் போது அது விரக்திக்கும் சோர்வுக்கும் ஆட்பட்டு அந்தக் குழந்தைக்கும் கூட பாடசாலை சிறைச்சாலையாக மாறி விடுகின்றது. குடும்பத் தொடர்புகளும் தொடர் விளைவுகளும் குழந்தையின் முதல் உலகான குடும்பம் என்ற கருத்து நிலையில் ஆழ்ந்த உட்பொருள் இனவிருத்தி. இனவிருத்தி என்பதன் செம்மைப் படுத்தப் பட்ட பரந்த பொருள் ஆளுமையும், அறிவும் நிறைந்த உறுப்பினர்களாக உருவாக்குவதன் மூலம் தமக்கென தனித்துவ இன, பண்பாட்டு அடையாளங்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குதல். ஆளுமை விருத்திக்கான அடித்தளம் குழந்தைப் பருவமே என்ற தெளிவு நிலைக்கமைய குழந்தைக்கும் குடும்பத்துக்கும் இடையிலான இடைவெளியை இயன்ற வகையில் களைதலே முதல் மேற் கொள்ளப்பட வேண்டியது.

ஆனால் எப்படிக் களைவது.? பெரும்பாலும் குழந்தைக்கும் அதன் முதலாவது தொடர்பாளரான தாய்க்கும் இடையே காணப்படும் இடைவெளிகளில் முதன்மையானது குழந்தையின் அதீத ஆர்வத்திற்கும் அதற்குப் பதில் சொல்லும் ஆற்றலின்மைக்கும் இடையிலான இடைவெளியேயாகும். அதே போல் குழந்தையின் தாய்க்கும் தந்தைக்கும் இடையிலான தொடர்பு நிலை பெரும்பாலும் அடக்கியாளும் பாலுக்கும் அடங்கிப் போகும் பாலுக்கும் இடையிலான தொடர்பாகக் குழந்தையின் தற்கருத்தைப் பாதிக்கும் தொடர்பாக அமைகின்றது. அதேபோல் குழந்தைக்கும் அதன் சக தோழருக்கும் இடையிலான தொடர்பானது குழந்தைக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பு வசதிகளுக்கும் மறுக்கப்படும் வாய்ப்பு வசதிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளாக குழந்தையின் உணர்வுகளில் தாக்கம் ஏற்படுத்தும் தொடர்பாக அமைகின்றது. தற்போதைய பிரதான பிரச்சினை குழந்தைக்கும் அதன் நேரடித் தொடர்பாளராக இருக்கும் தாய்க்கும் இடையில் நிலவும் இடைவெளியைச் சமநிலைக்கு கொண்டு வருவதேயாகும்.

கருப்பையில் இருக்கும் 10 மாதங்களும், பின்னுள்ள பாலூட்டும் காலத்திலும்தான் குழந்தை வளர்ப்பின் அடிக்கட்டுமானம் போடப் படுகின்றது. உலகமெங்கும் வீசும் பெண்ணிய அலை ஊர்க் கோடிவரை ஊடுருவி விட்ட போதும் இன்று வரை இங்கு குடும்பத்தின் தாங்குதூண் பெண்தான். பெண்ணின் படிப்பறிவும், பொருளாதார சுதந்திரமும் மிக வேகமாக இரட்டைச்சுமையை பெண்கள் மேல் ஏற்றியிருப்பதே கண்கூடாகப் பார்க்கப்படும் ஒன்று. படிப்பறிவு கூட வாழ்வியல் பட்டறிவுக்கு உதவுவதாக இல்லை. குழந்தையின் துருவி ஆராயும் பண்புக்கு, கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் அளவுக்கு தாயின் அறிவு எட்டிப் பிடிக்கவேண்டும். குழந்தையின் தனித்தியங்கும் ஆற்றலையும், தேடல்த் தாகத்தையும் கட்டுப்படுத்த பிரயத்தனப் படும் தாய்மாரால் அதிகபட்சம் செய்ய முடிவதெல்லாம் "உம்மாண்டி வருகுது" என்று அச்சமூட்டி அவர்களின் ஆளுமையை இயன்றவகையில் சிதைப்பதே.

இரண்டாம் உலகின் முரண்கள் குழந்தைக்கும் அதன் இரண்டாவது உலகான பாடசாலைக்கும் இடையிலான உறவுநிலை பெரும்பாலும் அறிந்தவர் அறியாதவர், பெரியவர் சிறியவர் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளது. குழந்தையின் ஆளுமையை வடிவமைக்கவென மேல்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட குழந்தை மையக் கல்வித் திட்டங்கள் அதைவிட வேகமாக இங்கு வந்துவிட்டதை மறுக்க முடியாது. ஆனால் மேலை நாடுகளில் குழந்தைக் கல்வியை வடிவமைப்பவர்களோ நேரடியாக ஆசிரியர்களாக இருக்கின்றனர். தமது பட்டறிவை அப்படியே உணர்வும் சதையுமாக ஊட்டுகின்றனர். ஆனால் இங்கோ படிப்பறிவும் பட்டறிவும் சமைக்கப்பட்ட அதிலும் உணவு தயாரிப்பின் அனுபவங்கள், படிப்பினைகள் எதுவுமின்றி சமைக்கப்பட்ட சத்துணவாக சுடச்சுட, அறிவும் அனுபவமும் அற்ற இளைய சமூகத்திற்கு பரிமாறப்பட அது கணநேர சுவையை, மகிழ்வை, உணர்வை மட்டுமே கொடுக்க குழந்தைக் கல்வி பழைய பாதையிலேயே தவழ்கின்றது.

"ஆரம்ப கட்ட போதனை முறை முழு எதிர்கால நம்பிக்கையுடையதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தன் சக்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிநாள் குறித்தும் மகிழ வேண்டும். ஒவ்வொரு முறை ஆசிரியரைச் சந்திக்கும் போதும் சந்தோசப்பட வேண்டும். ஒவ்வொரு தடவை பாடத்திற்கு மணி அடிக்கும்போதும் உற்சாகப்பட வேண்டும்"

"தமது ஆசிரியர்களுக்குக் கோபம் ஏற்படுத்துவதற்காக குழந்தைகள் மறக்கவில்லை" போன்ற அற்புதமான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கும் குழந்தைகள் வாழ்க என்ற நூலை எழுதிய ரஸ்ய ஆசிரியரான அமனற்வீலி வெறும் ஆரம்ப பாடசாலை ஆசிரியர் மட்டுமல்ல. இவர் பிரபல சோவியத் விஞ்ஞானி, மனோதத்துவ இயலில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராசிரியர். இத்தனை தகுதிகளுடனும் தனது 15 வருட ஆசிரிய அனுபவத்தின் வழி 6 வயதுக் குழந்தைக்கு படிப்புச் சொல்லித் தருவதற்கான இலகுவான விளக்கங்களை தந்திருக்கும் நூல் அது. குழந்தைக் கல்வியை நேரடியாக அங்கு செய்வதே மூளை பழுத்த, தலை நரைத்த மேதைகள்தான் என்பது "இவ்வளவு படித்துப் போட்டு அரிவரிக்கோ படிப்பிக்கிறது" என எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களுக்கு வியப்பாகவும் வினோதமாகவுமே இருக்கும்.

முடிவாக, குழந்தையின் தற்கருத்தை, தனித்தியங்கும் ஆற்றலை, தேடல்த் திறனை ஊக்குவிக்கும் வகையில் இந்த முதல் உலகும் இரண்டாம் உலகும் மாற வேண்டிய, மாற்றப்பட வேண்டிய தேவை தனித்துவம் காக்க விரும்பும் எந்தச் சமூகத்திற்கும் அவசியமானதொன்று. இந்த வகையில் குடும்ப உறுப்பினர்களோ, பாடசாலை ஆசிரியர்களோ குழந்தையின் ஆளுமை விருத்திக்கு உதவும் வகையில் தத்தமது அறிவு நிலை, சிந்தனை போன்றவற்றிலிருந்து ஒன்றில் மேலெழும்பவோ அல்லது கீழிறங்கவோ தயாராகி குழந்தைக்கும் அதன் உலகிற்குமிடையில் சம நிலைத் தன்மையைப் பேண உதவும் போது குழந்தை ஆளுமை விருத்தி தொடர்பான முரண்கள் மூழ்கடிக்கப்பட வாய்ப்புண்டு.

அர்த்தநாரி

1 Comments:

At 10:20 PM, Blogger Suresh said...

Informative...

 

Kommentar veröffentlichen

<< Home

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.