Montag, November 08, 2004

பிறந்த உடனே குழந்தை பாலுக்கு அழுதால்...

பிறந்த உடனே குழந்தை பாலுப்கு அழுதால் என்ன செய்வது?
டொக்டர் - ஜெயசிறீ கஜராஜ்

அப்...பாடா!... இத்தனை கஷ்டப்பட்டு ஒருவழியாக நல்லபடியா குழந்தை பிறந்துவிட்டது! பெரிய தொல்லைவிட்டது... என்று எந்தத் தாயும் பிரசவத்துக்குப் பின் நினைத்துவிட முடியாது.!

கர்ப்பப்பைக்குள் இருந்தவரை குழந்தைக்கான ஆகாரத் தேவையை தாய்தான் மறைமுகமாகப் பார்த்துக்கொண்டாள். அதாவது, அவள் சாப்பிட்ட உணவின் சத்துக்கள் குழந்தைக்கு, தொப்புள்கொடி மூலம் சென்றடைந்தன. குழந்தை வெளியே வந்ததும் தாயின் பொறுப்புகள் பல மடங்கு கூடித்தான் போகிறதே தவிர குறைவதில்லை! அதில் முக்கியமான பொறுப்பு, குழந்தையின் ஆகாரத் தேவையை வேளாவேளைக்குப் பார்த்துக் கொள்ள வேண்டியது.

பிரசவித்த தாய் அதற்கு ஏற்பாடு செய்யப் பெரிதாக மெனக்கெட வேண்டாம் என்றும், பூ போன்ற பட்டுப் பாப்பாவுக்கு பரிசுத்தமான, சத்தான ஆகாரம் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும்தான் கடவுள், அந்த ஆகாரத்தையும் தாயின் உடலில் இருந்தே பாப்பாவுக்குக் கிடைக்கும்படியாகச் செய்திருக்கிறார்.

ஆனால், அதன் அருமை புரியாமல் இன்று பல பெண்கள், தங்கள் அழகு கெட்டுப் போய்விடுமோ என்கிற பயத்தில், குழந்தைக்கு, அதற்குக் கட்டாயம் கிடைக்க வேண்டிய இயற்கையான உணவைக் கிடைக்காமல் செய்துவிடுகின்றனர். இது மிகவும் வருத்தப்பட வைக்கிற விஷயம்.

கருத்தரித்த காலம் தொடங்கி தாயின் மார்பகம், குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏதுவாக அளவில் பெரிதாகத் தொடங்கும். அதிலும் குறிப்பாக, குழந்தை பிறக்க இன்னும் சில மாதங்களே இருக்கும் சமயத்தில் மார்பகத்தின் வளர்ச்சி அதிகப்படியாக இருக்கும். நிலிகிழிஞிஹிலிகிஸி ஜிமிஷிஷிஹிணிஷி என்னும் ஒருவித திசுக்களாலானது நம்முடைய மார்பகம். அதிலுள்ள சுரப்பிகள் வளர வளரத்தான் தாயின் மார்பகமும் அளவில் பெரிதாகத் தொடங்குகிறது.

குழந்தை பிறந்ததும் தாயின் உடல் தாய்ப்பால் ஊட்ட தன்னையும் அறியாமல் தயாராகிறது.

பிறந்த குழந்தைக்கு யாரும் கற்றுத்தராமலேயே தாயின் மார்பகத்தைக் கண்டுகொண்டு பாலை உறிஞ்சத் தொடங்குகிறது. அதுதான் தாயின் உடலுக்கு முக்கியமான ஒரு சமிக்ஞையாக அமைகிறது. பால் வராவிட்டாலும் குழந்தை, பாலை உறிஞ்சிக்கொள்ள முயலும்போது அந்தச் செய்கையானது தாயின் மூளைக்கு, குழந்தை பிறந்தாகிவிட்டது என்கிற செய்தியைத் தெரிவிக்கிறது.

மூளைக்கு சமிக்ஞை கிடைத்ததும் பால் கொடுக்க வேண்டும் என்று அங்கிருந்தே கட்டளை மார்பகத்தைச் சென்றடைகிறது. இந்த சமிக்ஞை சரியானபடி மூளைக்குச் சென்றடைந்து கட்டளையாகத் திரும்பி வர சற்றே தாமதமாகலாம். அதனால் பாப்பாவுக்குப் பால் கிடைக்க 24_48 மணிநேரம் வரை கூட ஆகலாம்.

தாயின் மூளையிலிருந்து சிக்னல் கிடைக்காமல் போவது மட்டும் தாய்ப்பால் சுரக்கத் தாமதமாவதற்குக் காரணமில்லை.. பாலை உறிஞ்சிக் குடிப்பது என்பது பாப்பாவுக்கும் புதிது என்பதாலும்கூட பால் சுரக்காமல் போகலாம்.

எனக்குத் தெரிந்து குழந்தை பிரசவமான ஓரிரு மணிநேரத்தில் வரக்கூடிய முதல் புகாரே, ‘‘அம்மாவுக்கு பால் வரலே... என்ன பண்ணறது டாக்டர்..?’’ என்ற, அம்மாவையும் பாப்பாவையும் சுற்றியிருக்கும் அத்தை, அம்மா, அக்கா போன்ற சொந்தக்காரர்களின் கேள்விதான். இவர்களில் பலர், பல குழந்தைகள் பெற்ற அனுபவம் உடையவராக இருந்தாலும் டென்ஷனாகின்றனர். இவர்கள் பதறுவதோடு அம்மாவையும் பதறச் செய்வதுதான் கொடுமை.

புதிதாகப் பிறந்த குழந்தையை எப்படித் தூக்குவது, கையாள்வது என்றுகூட அனுபவமில்லாத தாய்க்கு, இதனாலெல்லாம் பதற்றம் ஏற்பட்டு, பால் வராது தடைப்பட்டுக்கூடப் போகும் வாய்ப்பு உள்ளது. ஆகவே, அம்மாவைச் சுற்றியுள்ள சொந்தபந்தங்கள் அவரை டென்ஷன் படுத்தாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம்!

இயற்கையில் எந்த ஒரு தாய்க்கும் தாய்ப்பால் சுரக்காமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்பே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். குழந்தை பிறந்தால் பால் சுரந்தே தீரவேண்டும். இது, ஒரு மாதிரியான சுழற்சி முறையில் வரக்கூடிய விஷயம். அதற்காக நாம்தான் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்.

‘‘குழந்தை பசியால் அழுகிறதே... அதுவரைக்கும் எப்படிக் காத்திருப்பது?’’ என்று சிலர் கேட்பது புரிகிறது.. பிரசவமாகி மூன்று நாட்கள் வரை, எந்தவிதமான உணவும் இல்லாமல் இருக்க பாப்பாவின் உடல் தயார் நிலையில்தான் இருக்கிறது. நிலிசீசிளிநிணிழி ஷிஜிளிஸிணிஷி என்கிற, குழந்தையின் உடலிலேயே சேமித்து வைக்கப்பட்டுள்ள சத்துக்களை, உணவு கிடைக்காத அந்த ஆரம்ப நாட்களில் பாப்பாவின் உடல் தன்னால் பயன்படுத்திக் கொள்ளமுடியும்! அதுவரை நாமும் பெரிதாகக் கவலைப்படத்தேவையில்லை.

இது புரியாமல் பலர் பாப்பா அழுகிறது என்று சொல்லி, அதற்கு சர்க்கரைத் தண்ணீரையோ பால் பவுடரையோ கலக்கிக் கொடுத்துவிடுகின்றனர். இது தேவையில்லாதது. குழந்தைக்கு தேவைப்படும் போது தாய்தான் பால் தரவேண்டும். இது ஒரு சைக்கிள் ரியாக்ஷன். இடையில் நாம் புகும்போதுதான் எல்லாமே குளறுபடியாகிவிடுகிறது. எப்படி?

குழந்தை அழுகிறது என்று நாம் சர்க்கரைத் தண்ணீர் அல்லது பால்பவுடர் போன்ற எதையோ கொடுக்க, அதுவும் திருப்தியாகி அழுகையை நிறுத்திவிடுகிறது. இப்படி நாம் தாய்ப்பாலுக்குப் பதிலாக எதையோ கொடுப்பதால் குழந்தைக்குத் தாய்ப்பாலை உறிஞ்சிக் குடிக்க சந்தர்ப்பமே இல்லாமல் செய்துவிடுகிறோம். மேலும், தாய்ப்பால் இயற்கையில் இனிப்பில்லாமல் சப்பென்றுதான் இருக்கும். தாய்ப்பாலுக்குப் பதிலாக இனிப்பானதொரு விஷயம் கிடைத்து விடுவதால் குழந்தை, சுவைக் காரணமாகக்கூட தாய்ப்பாலை நிராகரித்துவிடும் வாய்ப்புள்ளது.

இதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. தாயின் மார்பிலிருந்து குழந்தை உறிஞ்ச உறிஞ்சத்தான் பால் கொஞ்சம் கொஞ்சமாக சுரக்கும். புட்டிப்பாலில் உள்ள நிப்பிளில் துளை பெரிதாக இருப்பதால் ஒருமுறை உறிஞ்சும்போதே குழந்தைக்கு அதிகப்படியாகப் பால் கிடைத்துவிடுகிறது. எளிதாகவும், அதே சமயம் இனிப்பாகவும் பால் கிடைத்து விடுவதால் குழந்தை புட்டிப்பாலையே அதிகம் விரும்பி, தாய்ப்பால் குடிப்பதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடும். பிறகெப்படி அம்மாவுக்குத் தொடர்ந்து பால் சுரக்க முடியும்?

அழும் குழந்தையை எப்படித்தான் சமாதானப்படுத்துவது என்றுதானே கேட்கிறீர்கள்.. பிறந்த குழந்தை சிறிது நேரம் அழுதால், தவறொன்றும் இல்லை. தொடர்ந்து அதிகநேரம் அழுது கொண்டே இருந்தால் மட்டும் குழந்தையை மருத்துவரிடம் காட்டலாம்..

சந்திப்பு: ஜி. கிருஷ்ணகுமாரி
nantri-kumutham-sinehithy

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.